சிங்கப்பூரின் பொதுப் பேருந்து ஓட்டுநர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள சம்பள உயர்வுக்கான செலவுகள் பயணிகள் மீது சுமத்தப்படாது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) தெரிவித்துள்ளது.
பேருந்து ஓட்டுநர்களுக்கான சம்பள உயர்வு 2027 ஜனவரியில் நடப்புக்கு வருகிறது. ஆனால், பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களை நிர்ணயிக்கக்கூடிய காரணிகளில் ஒன்றாக சம்பள உயர்வுக்கான செலவு இடம்பெறாது என்று குறிப்பிட்டுள்ளது ஆணையம்.
போக்குவரத்துக் கட்டணங்களை சரிசெய்யும்போது பொதுப் போக்குவரத்து மன்றம் பல்வேறு காரணிகளை கவனத்தில் எடுத்துக்கொள்வது வழக்கம். அத்தகைய காரணிகளில் ஓட்டுநர் சம்பள உயர்வும் உள்ளதா என்று ஊடகங்கள் எழுப்பிய வினாக்களுக்கு ஆணையம் பதிலளித்துள்ளது.
பேருந்து ஓட்டுநர் சம்பள உயர்வுக்கு அரசாங்கம் நிதி வழங்கும் என்று கடந்த புதன்கிழமை (ஜூன் 3) ஆணையம் கூறியது. அதன்படி, புதிதாக ஓட்டுநர் வேலையில் சேரும் சிங்கப்பூரர்கள் மற்றும் நிரந்தரவாசிகளின் மாதாந்தர சம்பளத்தில் $450 உயர்த்தப்படுகிறது. அத்துடன், வேலையில் சேரும்போது $2,000 போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து ஓட்டுநர்களைத் தக்க வைத்துக்கொள்வதிலும் புதியவர்களை நியமிப்பதிலும் பேருந்து நிறுவனங்கள் சாவல்களை எதிர்நோக்குகின்றன. அத்துடன், ஊழியரணியும் மூப்படைந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், உள்ளூர்வாசிகளை பேருந்து ஓட்டுநர் பணிக்குக் கவர்ந்திழுக்கும் விதமாக சம்பள உயர்வு, போனஸ் போன்ற சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பேருந்து ஓட்டுநர் வேலையில் சேரும் புதியவர்களுக்கான சராசரி சம்பள விகிதம் தற்போது $3,600ஆக உள்ளது. சம்பள உயர்வின் மூலம் அது $4,000ஆக உயரும். மிகைநேர ஊதியம் உள்ளிட்ட பிற சலுகைகளும் அதில் அடங்கும்.
தற்போது பணியில் உள்ள பேருந்து ஓட்டுநர்களுக்கு ஒருமுறைக்கான சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் $150 முதல் $250 வரையிலான சம்பள உயர்வைப் பெறுவர். அதற்கான செலவை அந்தந்த பேருந்து நிறுவனங்களே ஏற்றுக்கொள்ளும்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூரில் நான்கு பொதுப் பேருந்து நிறுவனங்கள் உள்ளன.
இதற்கான செலவு, எத்தனை உள்ளூர்வாசிகள் பேருந்து ஓட்டுநர் வேலையில் புதிதாக சேர்கிறார்கள் என்பதைப் பொறுத்தது என்று ஆணையம் விளக்கி உள்ளது. பொதுப் பேருந்து துறைக்கான அரசாங்க மானியம் தற்போது $1 பில்லியனுக்கும் மேல் உள்ளது.

