பலருக்கும் காயம் விளைவித்த பேருந்து ஓட்டுநர் ஒருவருக்குத் திங்கட்கிழமை (ஜூலை 21) அதிகபட்ச அபராதமாக S$5,000 விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு (2024) நவம்பர் மாதம் 29ஆம் தேதி காலை 8 மணிக்கு நேர்ந்த விபத்தில் லாரி பயணி ஒருவர் கடுமையாகக் காயமுற்றார். மேலும் 16 பேர் விபத்தில் காயமடைந்தனர்.
விபத்தில் ஆறு வாகனங்கள் சம்பந்தப்பட்டிருந்தன.
சடாம் லடா எனும் 33 வயது மலேசியருக்கு வாகனம் ஓட்டுவதற்கும் ஐந்து ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. கவனமின்றி வாகனம் ஓட்டிய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து தண்டனை விதிக்கப்பட்டது.
சடாம், மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தை உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடியை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச்சாலையில் ஓட்டிச்சென்றார்.
மழை பெய்தபோதும், போக்குவரத்து மிதமாக இருந்ததாகவும் தெளிவாகப் பார்க்கமுடிந்ததாகவும் அரசாங்க வழக்கறிஞர் சொன்னார். சடாம், மூன்றாம் தடத்திலிருந்து இரண்டாம் தடத்திற்குக் கவனமின்றி வாகனத்தைச் செலுத்தியதால் விபத்து நேர்ந்ததாக வழக்கறிஞர் கூறினார்.

