பேருந்து ஓட்டுநர்கள் வேகத்தை ஒழுங்குபடுத்துவது அவசியம்: எல்டிஏ

ஒரே பேருந்துச் சேவை அடுத்தடுத்து வருவதைத் தவிர்க்க வேண்டியது குறித்து விளக்கம்

பேருந்து ஓட்டுநர்கள் வேகத்தை ஒழுங்குபடுத்துவது அவசியம்: எல்டிஏ

2 mins read
9c78596e-5e4f-4ed0-9fdb-80088f0133a1
டிக்டாக்கில் வெளியிடப்பட்ட காணொளியில், பயணி ஒருவர் டவர் டிரான்சிட் பேருந்து ஓட்டுநரைக் குறைகூறுவது பதிவாகியிருந்தது. - காணொளிப் படங்கள்: டிக்டாக்

பொதுப் பேருந்துகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் சீராக வருவதை உறுதிசெய்யவும் ஒரே பேருந்துச் சேவை அடுத்தடுத்து வருவதைத் தவிர்க்கவும் பேருந்து ஓட்டுநர்கள் தங்களது வேகத்தை ஒழுங்குபடுத்துவது அவசியம் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) கூறியுள்ளது.

பேருந்து மெதுவாகச் செல்வதாகப் பயணி ஒருவர் காணொளி எடுத்துப் புகார் அளித்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து புதன்கிழமை (ஜூலை 15) விளக்கமளிக்கப்பட்டது.

ஜூலை 6ஆம் தேதி டிக்டாக்கில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றில், “உங்கள் இஷ்டப்படி மெதுவாக ஓட்டுகிறீர்கள்,” என்று பயணி ஒருவர் டவர் டிரான்சிட் பேருந்து ஓட்டுநரிடம் குறைகூறுவது பதிவாகியிருந்தது.

இதுகுறித்து புதன்கிழமை ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ஆணையம், பேருந்து ஓட்டுநர்கள் பயணிகளின் பாதுகாப்பு, போக்குவரத்து நிலவரம், பேருந்துச் சேவையின் நம்பகத்தன்மை போன்ற பல அம்சங்களைக் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளதாகக் குறிப்பிட்டது.

அவர்கள் தங்களது வேகத்தை ஒழுங்குபடுத்தி, திட்டமிடப்பட்ட கால அட்டவணையைப் பின்பற்ற வேண்டியுள்ளது.

“இது, ஒரே பேருந்துச் சேவை அடுத்தடுத்து வருவதைத் தவிர்ப்பதுடன், பேருந்துகள் சீரான கால இடைவெளியில் வருவதை உறுதிசெய்கிறது,” என்று ஆணையம் விவரித்தது.

டவர் டிரான்சிட் புதன்கிழமை வெளியிட்ட தனது ஃபேஸ்புக் பதிவில், சேவை எண் 984ஐ இயக்கிய பேருந்து ஓட்டுநர் சம்பந்தப்பட்ட காணொளி குறித்துத் தனக்குத் தெரியும் என்றது.

“சம்பந்தப்பட்ட பயண விவரங்களை நாங்கள் ஆய்வு செய்தோம். திட்டமிடப்பட்ட கால அட்டவணையின்படியே பேருந்தை ஓட்டுநர் இயக்கியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளோம்,” என்று டவர் டிரான்சிட் விளக்கியது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

சாலைப் போக்குவரத்து சீராக இருந்தாலும், பேருந்துகளுக்கு இடையே சீரான இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியிருப்பதால், சில நேரங்களில் பேருந்துகள் மெதுவாகச் செல்லக்கூடும் என்றும் அது விவரித்தது.

பயணிகளுக்கான காத்திருப்பு நேரம் முடிந்தவரை சீராகவும் கணிக்கக்கூடியதாகவும் இருப்பதை உறுதிசெய்யவே இவ்வாறு செய்யப்படுகிறது என்றும் அது கூறியது.

சம்பந்தப்பட்ட பயணி புகார் அளித்தபோதிலும், அமைதியாகவும் தொழில்முறையுடனும் பாதுகாப்பாக பேருந்தை ஓட்டுவதில் கவனம் செலுத்தியதற்காக ஓட்டுநரை டவர் டிரான்சிட் பாராட்டியது.

“எங்கள் பேருந்து ஓட்டுநர்கள் நெருக்குதலுக்கு ஆளாகாமல் பயமின்றித் தங்களது கடமைகளைச் செய்யத் தகுதியானவர்கள்,” என்று குறிப்பிட்ட டவர் டிரான்சிட், பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் தொந்தரவு செய்யப்படுவதையும் அவர்களின் அடையாளத்தை இணையத்தில் வெளியிடுவதையும் தான் முற்றிலும் எதிர்ப்பதாக வலியுறுத்தியது.

பணியில் இருக்கும் பொதுப் போக்குவரத்து ஊழியர்களைத் திசைதிருப்பும், துன்புறுத்தும் அல்லது நெருக்குதலுக்கு ஆளாக்கும் செயல்களில் ஈடுபடுவதைப் பயணிகள் தவிர்க்க வேண்டும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.

பயணிகள் ஏதேனும் கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினால், அதனை அதிகாரபூர்வ வழிகள்மூலம் தெரிவிக்குமாறு டவர் டிரான்சிட் கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
பேருந்துபயணிகள்நிலப் போக்குவரத்து ஆணையம்