கோ அஹேட் பேருந்து ஒன்று தவறுதலாக லோயாங் வட்டாரத்தில் உள்ள தரைவீடுகள் குடியிருப்புப் பேட்டைக்குள் நுழைந்ததை அடுத்து, அங்கு சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பல கார்கள் சேதமடைந்தன.
அந்த கார்கள் மீது பேருந்து உரசிக்கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 20) நிகழ்ந்தது.
70 வயது பேருந்து ஓட்டுநர் விசாரணையில் உதவி வருவதாகச் சிங்கப்பூர் காவல்துறை கூறியது.
அந்தக் குடியிருப்புப் பேட்டையில் உள்ள ஒரு தரைவீட்டின் வாசலில் பொருத்தப்பட்ட கண்காணிப்புக் கேமராவில் இப்போக்குவரத்துச் சம்பவம் பதிவானது. இக்காணொளிப் பதிவு இன்ஸ்டகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
ஜனவரி 20ஆம் தேதி அதிகாலை 5.05 மணி அளவில் பேருந்து, மூன்று கார்கள் ஆகியவற்றுடன் தொடர்புடைய விபத்து குறித்து தகவல் கிடைத்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
தெம்பனிஸ் அவென்யூ 7ஐ நோக்கிச் செல்லும் லோயாங் அவென்யூ தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதை அடுத்து, இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகப் பொதுப் போக்குவரத்து பேருந்து நிறுவனமான கோ அஹேட் சிங்கப்பூர் தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
பாதிக்கப்பட்டோரிடம் அது மன்னிப்பு கேட்டுக்கொண்டதுடன் சம்பவத்துக்கு முழு பொறுப்பு ஏற்றுக்கொள்வதாகவும் அது கூறியது.
இந்நிலையில், சம்பவம் குறித்து தெரியவந்ததும் பாசிர் ரிஸ்-சாங்கி குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வெலரி லீ, லோயாங் ரைஸ் மற்றும் லோயாங் வியூவுக்கு நேரில் சென்று குடியிருப்பாளர்களிடம் பேசினார்.
பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களுடன் கோ அஹேட் நிறுவனம் தொடர்புகொண்டுவிட்டதாகவும் குடியிருப்பாளர்கள் சிலரின் வாகனங்கள் பழுதுபார்ப்புப் பணிகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.
சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பு குறித்து குடியிருப்பாளர்கள் பலர் கவலை தெரிவித்ததாகத் திருவாட்டி லீ தெரிவித்தார்.

