மலேசியாவில் விபத்துக்குள்ளான பேருந்தை இயக்கிய மலேசிய நிறுவனம் முறைப்படி அங்கீகாரம் பெற்று இருந்தது என்று நிலப் போக்குவரத்து ஆணையமும் சிங்கப்பூர் பயணத் துறைக் கழகமும் தெளிவுபடுத்தியுள்ளன.
இம்மாதம் 11ஆம் தேதி மலேசியாவின் வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று பயங்கர விபத்தில் சிக்கியது. இந்த பேருந்தை எக்ஸ்பிரஸ் செனிபுடாயா என்ற நிறுவனம் இயக்கியது.
அந்த நிறுவனம் சிங்கப்பூரில் எல்லை தாண்டிய சேவை வழங்க நிலப் போக்குவரத்து ஆணையத்திடமிருந்து உரிமம் பெற்று இருந்தது என்று இரு அமைப்புகளின் அதிகாரிகள் அக்டோபர் 21ஆம் தேதி வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவித்தனர்.
எக்ஸ்பிரஸ் செனிபுடாயா சட்டபூர்வ அனுமதி பெற்று இருந்ததா என்று முன்னாள் வணிக பங்காளி ஒருவர் கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து இரு அமைப்புகள் விளக்கமளித்தன.
செனிபுடாயா, அதன் டிக்கெட் விற்பனை முகவரான லியோ சிட்டி கோச் மூலம் டிக்கெட்டுகளை விற்கவும் அங்கீகாரம் பெற்று இருந்தது என்று பேச்சாளர்கள் குறிப்பிட்டனர்.
லியோ சிட்டி கோச், சிங்கப்பூரில் செயல்படவும் டிக்கெட் சேவைகளை வழங்கவும் சிங்கப்பூர் பயணத் துறைக் கழகத்திடமிருந்து முறையான உரிமம் பெற்று இருந்தது.
“பேருந்து நடத்துநர்கள் தங்களுடைய டிக்கெட் முகவர்களை நியமிக்கவும் மாற்றவும் உரிமை உள்ளது,” என்று பேச்சாளர்கள் மேலும் கூறினர்.
“சூப்பர் நைஸ் எக்ஸ்பிரஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் எக்ஸ்பிரஸ் செனிபுடாயா இடையே டிக்கெட் நிர்வாகம் தொடர்பில் வணிக ரீதியான பேச்சுவார்த்தைகள் நடந்ததை நாங்கள் புரிந்து வைத்துள்ளோம். ஆனால் இவை எங்களுடைய ஒழுங்குமுறை வரம்புக்கு அப்பாற்பட்ட வணிக விவகாரங்கள்,” என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
விபத்துக்குள்ளான பேருந்தில் போக்குவரத்து நிறுவனமான சூப்பர் நைஸ் எக்ஸ்பிரஸ் சின்னம் இடம்பெற்று இருந்தது. இருந்தாலும் அந்த பேருந்தை எக்ஸ்பிரஸ் செனிபுடாயா இயக்கியிருந்தது.
அக்டோபர் 11ஆம் தேதி சிங்கப்பூரில் பூன் லேயிலிருந்து புறப்பட்ட பேருந்து ஈப்போவை நோக்கி பயணித்தது. அதிகாலை 3.00 மணி அளவில் சிலாங்கூரின் பாங்கிக்கு அருகே நெடுஞ்சாலையில் அது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 28 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் ஐந்து சிங்கப்பூரர்களும் ஓட்டுநரும் அடங்குவர்.

