அதிகமான உள்ளூர் ஓட்டுநர்களை ஈர்க்கும் பேருந்து நிறுவனங்கள்

அதிகமான உள்ளூர் ஓட்டுநர்களை ஈர்க்கும் பேருந்து நிறுவனங்கள்

2 mins read
277bff81-72e9-4f37-8a12-76aef3adb482
தற்போது கூடுதல் நேரப் பணியைச் சேர்த்து, பேருந்து ஓட்டுநர்களுக்கான தொடக்கச் சம்பளம் $3,600ஆக உள்ளது.  - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதிய பேருந்து ஒட்டுநர்களாகச் சேரும் சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும் எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் $20,000 ஊக்கத்தொகை வழங்குவதைக் கேட்டதும் திரு இயோ ஸி சி வேலை மாறினார்.

தீயணைப்பான்களை விற்றுக்கொண்டிருந்த திரு இயோ, பேருந்து ஓட்டுநர் பணி மேலும் நிலையானது என்று உணர்ந்தார். வயதானாலும், தாம் தொடர்ந்து பேருந்துகளை ஓட்டலாம் என்று அவர் நினைத்தார். 37 வயதான அவர், வேலை நேரத்தாலும் பேருந்து ஓட்டுநராகச் சேர்ந்துகொள்ள எண்ணியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார்.

சில வாரநாள்களில் மாலை நேரத்தில், மகன்களுடன் இரவு உணவு உண்பதற்கு நேரம் கிடைக்கும் என்றார் அவர். திரு இயோ ஈசூனில் 807, 851e ஆகிய பேருந்துச் சேவைகளை ஓட்டுகிறார்.

போக்குவரத்துத் தற்காலிக அமைச்சர் ஜெஃப்ரி சியாவ், கடந்த மார்ச் 4ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதி ஒதுக்கீட்டு விவாதத்தின்போது, போதிய சிங்கப்பூரர்கள் பேருந்து ஓட்டுநர்களாக இருப்பதை விரும்புவதில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

புதியவர்களை வேலைக்கு ஈர்க்க, பேருந்து ஓட்டுநர்களுக்கான தொடக்கச் சம்பளத்தை அதிகரிப்பதற்கான யோசனையை அவர் வரவேற்றார். தற்போது கூடுதல் நேரப் பணியைச் சேர்த்து, தொடக்கச் சம்பளம் $3,600ஆக உள்ளது.

பேருந்து நிறுவனங்களுடனும் தேசியப் போக்குவரத்து ஊழியர்கள் தொழிற்சங்கத்துடனும் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருப்பதாக திரு சியாவ் கூறினார்.

உள்ளூர்ப் பேருந்து ஓட்டுநர்களுக்கு ஏற்கெனவே வேலையில் சேரும்போது ஊக்கத்தொகை உள்ளபோதும், தொடக்கச் சம்பளத்தை மறுஆய்வு செய்யும் சாத்தியம் ஆராயப்படலாம் என்று கடந்த பிப்ரவரியில் திரு சியாவ் கூறியிருந்தார்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் நாடாளுமன்றக் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்தபோது, சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டில் 9,700 பேருந்து ஓட்டுநர்கள் இருந்ததாக திரு சியாவ் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, அவர்களில் 28 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள், 15 விழுக்காட்டினர் சிங்கப்பூர் நிரந்தரவாசிகள், 57 விழுக்காட்டினர் வெளிநாட்டு வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள்.

பேருந்து ஓட்டுநர்களாகச் சேரும்போது ஊக்கத்தொகை வழங்கும் நிறுவனங்களில் ‘கோ அஹேட் சிங்கப்பூர்’, ‘எஸ்எம்ஆர்டி பஸ்சஸ்’ ஆகியவையும் அடங்கும்.

குறிப்புச் சொற்கள்