அனைத்துலக நிபுணர்களின் ஆலோசனையை நாடும் பேருந்துச் சேவை பாதுகாப்புப் பணிக்குழு

2 mins read
4aabbf27-918e-4a88-bc96-5a0d086c7870
ஜூலை மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பயணிகள், சாலையைப் பயன்படுத்துபவர்கள், பேருந்து ஓட்டுநர்கள், ஏனைய பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் ஆகியோரிடம் பணிக்குழு பேசியதாக போக்குவரத்துத் துணை அமைச்சர் முரளி பிள்ளை கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பொதுப் பேருந்துச் சேவை பாதுகாப்பை மறுஆய்வு செய்ய அமைக்கப்பட்ட பணிக்குழு, அடுத்த சில மாதங்களில் அனைத்துலக நிபுணர்களின் ஆலோசனையைப் பெற இருக்கிறது.

சிங்கப்பூரின் பொதுப் பேருந்துச் சேவை கடைப்பிடிக்கக்கூடிய பொருத்தமான அணுகுமுறைகளை அடையாளம் காண இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக போக்குவரத்துத் துணை அமைச்சர் முரளி பிள்ளை நவம்பர் 13ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மறுஆய்வை 2025ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களுக்குள் நிறைவுசெய்ய பணிக்குழு இலக்கு கொண்டிருப்பதாகத் திரு முரளி பிள்ளை கூறினார்.

பணிக்குழுவுக்குத் திரு முரளி தலைமை தாங்குகிறார்.

பணிக்குழு கவனம் செலுத்தும் அம்சங்கள், பொதுப் பேருந்துச் சேவை பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் எந்த அளவுக்கு பல்வேறு அமைப்புகளுடன் அது இணைந்து செயல்பட்டுள்ளது ஆகியவை குறித்து பீஷான்-தோ பாயோ குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு சக்தியாண்டி சுபாட் கேள்வி எழுப்பியிருந்தார்.

அவருக்குப் பதிலளிக்கும் வகையில் திரு முரளி பிள்ளை நாடாளுமன்றத்தில் விளக்கமளித்தார்.

ஜூலை மாதத்துக்கும் அக்டோபர் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பயணிகள், சாலையைப் பயன்படுத்துபவர்கள், பேருந்து ஓட்டுநர்கள், ஏனைய பொதுப் போக்குவரத்து ஊழியர்கள் ஆகியோரிடம் பணிக்குழு பேசியதாக அவர் கூறினார்.

பேருந்துச் சேவை பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பாக அவர்களின் கருத்துகளைப் பெற இந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த ஒரு மாதக்கால ஆய்வில் பொதுமக்களில் 2,300 பேரும் 3,400 பேருந்து ஓட்டுநர்களும் பங்கெடுத்தனர்.

கலந்துரையாடல்களில் 160 பயணிகளும் சாலையைப் பயன்படுத்துபவர்களும் கலந்துகொண்டனர்.

சிங்கப்பூரில் பொதுப் பேருந்துச் சேவை வழங்கும் நான்கு நிறுவனங்களிடமும் பணிக்குழு கலந்துரையாடியது.

அந்த நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் பாதுகாப்பு அணுகுமுறைகளைப் பற்றி அறிந்துகொள்ள இவ்வாறு செய்யப்பட்டது.

பேருந்து ஓட்டுநர்களின் அக்கறைகள், அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள அவர்களுடன் பணிக்குழு கலந்துரையாடியது.

எஸ்பிஎஸ் டிரான்சிட், எஸ்எம்ஆர்டி, கோ அஹேட் சிங்கப்பூர், டவர் டிரான்சிட் சிங்கப்பூர் ஆகிய நிறுவனங்கள் பொதுப் பேருந்துச் சேவைகளை வழங்குகின்றன.

அவற்றின்கீழ் ஏறத்தாழ 5,800 பேருந்துகள் இயங்குகின்றன.

பேருந்துச் சேவை பாதுகாப்பு நன்றாக இருப்பதாக இதுவரை கிடைத்த கருத்துகள் மூலம் தெரியவந்துள்ளதாக திரு முரளி பிள்ளை பகிர்ந்துகொண்டார்.

இருப்பினும், பேருந்துச் சேவை பாதுகாப்பின் சில அம்சங்களின் தரத்தை மேம்படுத்தலாம் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்