தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டிசம்பர் 10 முதல் பேருந்துச் சேவை 167 நிறுத்தம்

1 mins read
902d0c38-8b66-4a06-8c18-b2df5bc7920e
பேருந்து 167 சேவை நிறுத்தப்படுவதால், அது சென்ற பாதைகளில் 980 சேவை அதிகரிக்கப்படும். - படம்:எஸ்பிஎச்

வரும் டிசம்பர் 10ஆம் தேதி முதல் பல பேருந்துச் சேவைகளின் தடங்கள் மாற்றப்படவுள்ளன.

அவற்றில் செம்பவாங்கிலிருந்து அப்பர் தாம்சன், ஆர்சர்ட் சாலைகள் வழியாக புக்கிட் மேராவுக்கு சென்று வந்த பேருந்துச் சேவை எண் 167 முற்றிலும் நிறுத்தப்படவுள்ளது என்று நிலப் போக்குவரத்து ஆணையம் (நவம்பர்17) வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பரில் தாம்சன் - ஈஸ்ட் கோஸ்ட் எம்ஆர்டி இணைப்பின் 3ஆம் கட்டம் செயல்படத் தொடங்கியதிலிருந்து அந்த வழியில் செல்லும் பேருந்து பயணிகள் எண்ணிக்கை 30 முதல் 40 விழுக்காடு குறைந்துவிட்டது. அதேவேளை, புதிய எம்ஆர்டி பயணிகள் எண்ணிக்கை 2022ல் 60,000ஆக இருந்து தற்போது 177,000ஐ எட்டியுள்ளது என்று ஆணையம் கூறியது.

ஸ்டீவன்ஸ் பகுதி தொடங்கி கரையோரப் பூந்தோட்டங்கள் (கார்டன்ஸ் பை தி பே) வரையிலும் 11 எம்ஆர்டி நிறுத்தங்கள் 2022 நவம்பர் மாதத்தில் இயங்கத்தொடங்கின. அவற்றில் ஸ்டீவன்ஸ், அவுட்ரம் பார்க், மரினா பே ஆகியன ரயில் சந்திப்பு முனையங்களாகும். அங்கு பயணிகள் மாற்று ரயில்களில் மற்ற தடங்களுக்குச் செல்லலாம்.

சிங்கப்பூரின் பல பகுதிகளுக்குச் செல்ல தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் தடம் மிகவும் வசதியாக உள்ளது. நேரம் மிச்சமாவதால் பலர் இச்சேவைகளை பயன்படுத்துகின்றனர். மேஃபிளவர் பகுதியில் வசிப்பவர் இப்போழுது மத்திய வர்த்தக வட்டாரத்துக்கு 30 நிமிடங்களில் எம்ஆர்டியில் சென்றுவிடலாம். பேருந்தில் அதே இடத்துக்குச் செல்ல 45 நிமிடங்கள் ஆகும்.

குறிப்புச் சொற்கள்