பூசானின் ‘ஏஐ’ துறைமுகம் சிங்கப்பூரின் துவாஸ் துறைமுகத்திற்குப் போட்டியாக அமையக்கூடும்

பூசானின் ‘ஏஐ’ துறைமுகம் சிங்கப்பூரின் துவாஸ் துறைமுகத்திற்குப் போட்டியாக அமையக்கூடும்

2 mins read
de863e58-f996-4eb2-a568-d43cd7155810
சிங்கப்பூருக்கு அடுத்தபடியாக, உலகின் இரண்டாவது பரபரப்பான சரக்கு மாற்றுத் துறைமுகமான பூசான், 2030ஆம் ஆண்டுக்குள் $373 மில்லியன் மதிப்பிலான, செயற்கை நுண்ணறிவு சார்ந்த ஒரு உருமாற்றப் பணியைத் தொடங்குகிறது. - படம்: பூசான் துறைமுக ஆணையம்

2040ஆம் ஆண்டில் சிங்கப்பூரின் துவாஸ் பெருந்துறைமுகம் கட்டி முடிக்கப்படும் நேரத்தில், தென் கொரியாவின் பூசான் துறைமுகமும் முழுமையாகத் தானியங்கி, செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஒரு அறிவார்ந்த துறைமுகமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இரு துறைமுகங்களும் கட்டி முடிக்கப்படும்போது, ​​அடுத்த தலைமுறை ஆகப் பெரிய கொள்கலன் கப்பல்களைக் கையாளும் திறன் கொண்ட 66 கப்பல் நிறுத்துமிடங்கள் ஒவ்வொன்றிலும் இருக்கும்.

ஏற்கெனவே, வேறு சில ஒற்றுமைகளும் உள்ளன. இரண்டுமே முக்கிய சரக்கு மாற்றுத் துறைமுகங்கள் ஆகும். சிங்கப்பூரின் 40 மில்லியன் இருபது அடிக்குச் சமமான கொள்கலன்களுடன் ஒப்பிடுகையில், பூசான் தற்போது சிங்கப்பூருக்குப் பிறகு உலகின் இரண்டாவது பரபரப்பான சரக்கு மாற்றுத் துறைமுகமாக, 14 மில்லியன் இருபது அடிக்குச் சமமான கொள்கலன்களுடன் திகழ்கிறது.

சரக்குகள் இறுதி இலக்கை அடைவதற்கு முன்பு, ஓர் இடைநிலைத் துறைமுகத்தில் கப்பல்களுக்கு இடையில் அவற்றை மாற்றுவதையே இடமாற்றம் (Transhipment) என்று குறிப்பிடுகிறோம்.

பூசான் துறைமுகம் கட்டி முடிக்கப்பட்டதும், அதன் தற்போதைய கொள்கலன் கையாளும் திறன் கிட்டத்தட்ட 40 மில்லியன் கொள்கலன்களாக இரட்டிப்பாகும். அதே நேரத்தில், புதிய துவாஸ் துறைமுகம் 65 மில்லியன் கொள்கலன்களைக் கையாளும் திறனைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய, முழுமையாகத் தானியங்கப்படுத்தப்பட்ட துறைமுகமாக அமையும்.

ஆனால், துறைமுகச் செயல்பாடுகளை விரிவுபடுத்தவும் தானியங்கபடுத்தவும் முன்னெடுக்கப்படும் முயற்சிகளில் ஒற்றுமைகள் இருந்தாலும், பூசான் துறைமுகம் சிங்கப்பூரின் பிரம்மாண்டமான துறைமுகத்துடன் போட்டியிட முற்படவில்லை.

மாறாக, இந்த தென் கொரியத் துறைமுகத்தின் நேரடிப் போட்டியாளர்கள் முறையே உலகின் மிகப்பெரிய மற்றும் மூன்றாவது பெரிய துறைமுகங்களான சீனாவின் ஷாங்காய் மற்றும் நிங்போ-ஜோஷான் துறைமுகங்கள் ஆகும்.

பூசான் மற்றும் சிங்கப்பூர் ஆகியவை அடிப்படையில் வெவ்வேறு போட்டி நிலைகளைக் கொண்டுள்ளன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நிலைகள் புவியியல் மற்றும் கப்பல் வழித்தடங்களால் மட்டுமல்லாமல், சரக்குப் போக்குவரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் புவிசார் அரசியல் அபாயங்களாலும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

பூசான், தென் கொரியாவின் மிகப்பெரிய துறைமுகமாகும். மேலும் இது அந்நாட்டின் மொத்த கொள்கலன் சரக்குகளில் சுமார் 80 விழுக்காட்டைக் கையாளுகிறது.

கண்டங்களுக்கு இடையேயான சரக்கு மாற்றுப் போக்குவரத்தில் சிங்கப்பூர் ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், பூசான் வடகிழக்கு ஆசியாவிற்குள் சரக்குகளைத் திரட்டி மறுவிநியோகம் செய்கிறது.

குறிப்புச் சொற்கள்