வர்த்தக நம்பிக்கை தொடர்ந்து இரண்டாம் காலாண்டாகச் சரிவு

வர்த்தக நம்பிக்கை தொடர்ந்து இரண்டாம் காலாண்டாகச் சரிவு

2 mins read
055b0d24-7542-43e3-9ff3-dcde2204c7a6
வர்த்தகக் கடன் பிரிவின் கருத்தாய்வில், சிங்கப்பூரில் உள்ள முக்கியத் தொழில்துறைகளைப் பிரதிநிதிக்கும் 200 வர்த்தக உரிமையாளர்களும் மூத்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.  - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

எதிர்வரும் மூன்று மாதங்களுக்கான உள்ளூர் வர்த்தகச் சூழல் தொடர்ந்து இரண்டாம் காலாண்டாய்ச் சரிந்துள்ளதாகச் சிங்கப்பூர் வர்த்தகக் கடன் பிரிவின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

இரண்டாம் காலாண்டுக்கு, சிங்கப்பூரின் வர்த்தக நம்பிக்கைக் குறியீடு சரிந்து, 4.1 விழுக்காட்டுப் புள்ளியாகப் பதிவானது.

முதலாம் காலாண்டில், அது 4.3 விழுக்காட்டுப் புள்ளியாக இருந்தது.

ஓராண்டுக்கு முன்னர், அது 5.2 விழுக்காட்டுப் புள்ளியாய்ப் பதிவானதாக வர்த்தகக் கடன் பிரிவு திங்கட்கிழமை (மார்ச் 16) கூறியது.

முதலாம் காலாண்டுக்குப் பிந்திய அரசியல் சூழல் மோசமடைந்துவரும் நிலையில், அந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் (பிப்ரவரி) 28ஆம் தேதி ஈரான்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல்கள் நடத்தியதிலிருந்து எரிசக்திக்கும் மற்றப் பொருள்களுக்குமான விலைகள் அதிகரித்துள்ளன.

தற்போது நிலவிவரும் போர்ச் சூழல், நிதிக் கொள்கை ஏப்ரலில் கடுமையாக்கப்படக்கூடிய சாத்தியத்தை அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, முக்கியப் பணவீக்க விகிதம் இரண்டாம் காலாண்டில் 1.3 விழுக்காடாகவும் இவ்வாண்டின் இரண்டாம் பாதியில் 1.8 விழுக்காடாகவும் இருக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.

“வர்த்தக நம்பிக்கை தொடர்ந்து இரண்டாம் காலாண்டாகக் குறைந்துள்ளது. உலகளவில் அரசியல் சூழல் நிச்சயமற்ற நிலையில் இருக்கும் வேளையில், பல நிறுவனங்கள் கவனத்துடன் செயல்படுகின்றன,” என்று வர்த்தகக் கடன் பிரிவின் தலைமை நிர்வாகி ஆட்ரி சியா கூறினார்.

வர்த்தகக் கடன் பிரிவின் காலாண்டு அடிப்படையிலான கருத்தாய்வில், சிங்கப்பூரில் உள்ள முக்கியத் தொழில்துறைகளைப் பிரதிநிதிக்கும் 200 வர்த்தக உரிமையாளர்களும் மூத்த நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், ஒட்டுமொத்த விற்பனைத் துறையில் வர்த்தக நம்பிக்கைக் குறியீடு மேம்பட்டதாகப் பிரிவு தெரிவித்தது.

விற்பனை அளவு, நிகர லாபம், விற்பனை விலை ஆகியவற்றுக்கான குறியீடு 6.7 விழுக்காட்டுப் புள்ளியாய்ப் பதிவானதாக அது கூறியது.

நிதித் துறையில், விற்பனை அளவு, நிகர லாபக் குறியீடு 21.4 விழுக்காட்டுப் புள்ளியாகப் பதிவாயின. உற்பத்தித் துறை மிதமான அளவில் மேம்பட்டது.

இந்நிலையில், கட்டுமானத் துறை இரண்டாம் காலாண்டில் ஆகச் சவால்மிகுந்த நிலையை எதிர்நோக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. விற்பனை அளவு, நிகர லாபக் குறியீடுகள் 7.7 விழுக்காட்டுப் புள்ளியாகப் பதிவானாலும் புதிய குத்தகைகள் கிடைப்பதில் தேக்கநிலை, வேலைவாய்ப்பு ஆகியவற்றால் அத்துறையின் ஒட்டுமொத்தக் கண்ணோட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
வர்த்தகம்நம்பிக்கைசரிவு