வணிகத் தலைவர்கள் ‘மாற்றத்தின் வடிவமைப்பாளர்களாக’ இருந்து, பெருகிவரும் பிளவுபட்ட உலகில் உலகளாவிய முடிவுகளை எடுக்க முடியும் என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
பொதுச் சேவைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சருமான அவர், “அரசாங்கங்கள் கொள்கைகளை வகுக்க முடியும்.
“ஆனால் சந்தைகள், தொழில்துறைகள் மற்றும் வணிகங்களே முடிவுகளைத் தீர்மானிக்கும்,” என்றார்.
ஃபோர் சீசன்ஸ் ஹோட்டலில் புதன்கிழமை (அக்டோபர் 1) நடைபெற்ற இந்த ஆண்டின் ‘மில்கென் இன்ஸ்டிடியூட் ஏஷியா’ உச்சநிலை மாநாட்டில், வணிகத் தலைவர்களிடம் அவர் உரையாற்றினார்.
உலகமயமாதல் அனைவருக்கும் பலனளிக்கும் வகையில் அமைவதற்கு, வணிகங்கள் இன்னும் கூடுதல் பங்கு வகிக்க முடியும் என்று திரு சான் கூறினார்.
பிளவுபடும் உலக ஒழுங்கு முறைக்கு மத்தியில் குரலெழுப்புமாறு பெருநிறுவனத் தலைவர்களிடம் அவர் வலியுறுத்தினார்.
சிறிய நாடுகளுக்கு நிகரான வளங்களைக் கொண்டிருக்கும் வணிகங்கள், உலகம் எந்தத் திசையை நோக்கிச் செல்கிறது என்பதை நிர்ணயிப்பதில் பங்கு வகிப்பதாக திரு சான் குறிப்பிட்டார்.
இதன் பொருட்டு, வணிகத் தலைவர்கள் என்ன செய்யலாம் என்பது குறித்து இரண்டு பரிந்துரைகளை அவர் முன்வைத்தார்.
தொடர்புடைய செய்திகள்
முதலாவதாக, கூட்டு முயற்சியின் புதிய மாதிரிகள், அதிக ஒருங்கிணைப்பு, புதிய பொருளியலை வழிநடத்த ஒரு புதிய விதித் தொகுப்பு ஆகியவற்றை வணிகங்கள் முன்னெடுக்க வேண்டும்.
இரண்டாவதாக, வணிகங்கள் தங்கள் ஊழியர்களில் முதலீடு செய்ய வேண்டும்.
அதன்மூலம், தொழில்நுட்ப இடையூறுகள் அல்லது பிளவுபட்ட உலகளாவிய அமைப்பால் பாதிக்கப்படக்கூடிய ஊழியர்கள் தாங்கள் கவனித்துக்கொள்ளப்படுவோம் என்ற நம்பிக்கையைப் பெற முடியும்.
சிங்கப்பூரின் பலங்களில் ஒன்று அதன் அரசியல் நிலைத்தன்மை என்றும் அது வணிகங்களுக்குப் பயனளிக்கிறது என்றும் திரு சான் கூறினார்.
மேலும், தனது மக்களின் நலன்களைப் பாதுகாப்பதன் மூலம் சமுதாயத்தை ஒற்றுமையுடனும் பிணைப்புடனும் சிங்கப்பூர் வைத்திருப்பதாக அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.