அதிகரித்து வரும் செலவுகளும் தேவைக்கான நிச்சயமற்ற தன்மையும் செயல்பாட்டுச் சூழலில் முக்கிய அக்கறைகளாக இருந்தாலும், 2025ஆம் ஆண்டில் நல்லவை நிகழும் என்று வர்த்தகங்கள் அதிக நம்பிக்கையுடன் உள்ளன.
பெரும்பாலான நிறுவனங்கள் இதையே உணர்ந்தாலும், 2024ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிலிருந்து 2025ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் பொருளியல் (26%) மேம்படும் என்று அதிக வர்த்தகங்கள் எதிர்பார்க்கின்றன. கடந்த ஆண்டில் இந்த விகிதம் 22% ஆக இருந்தது.
நான்காம் காலாண்டில் வர்த்தக நம்பிக்கை அதிகரித்தது. தற்போதைய வர்த்தக சூழ்நிலையில் 40% நிறுவனங்கள் திருப்தி அடைந்துள்ளன. இரண்டாம் காலாண்டில் 30% ஆக இருந்தது என்று சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் வருடாந்தர தேசிய வர்த்தக ஆய்வு தெரிவித்தது.
மீதமுள்ள வர்த்தகங்கள் ஒரு நடுநிலைக் கண்ணோட்டத்தைக் (41%) கொண்டிருந்தன அல்லது தற்போதைய வர்த்தகச் சூழலில் திருப்தியடையவில்லை (18%).
அக்டோபர் 11 முதல் நவம்பர் 11, 2024 வரை நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், அனைத்து முக்கிய தொழில்களிலும் உள்ள 519 நிறுவனங்கள் நேர்காணல் செய்யப்பட்டன. அவற்றில் 83%, சிறிய, நடுத்தர நிறுவனங்கள், 17% பெரிய நிறுவனங்களாகும்.
“2025ஆம் ஆண்டிற்குள் நாம் அடியெடுத்து வைக்கும்போது, வர்த்தகக் கண்ணோட்டத்தில் வளர்ச்சி குறித்த நம்பிக்கை அதிகரித்துள்ளது ஊக்கமளிக்கிறது. இது எங்கள் வர்த்தகங்களின் பின்னடைவு, சூழலுக்கு ஏற்றபடி சரிசெய்துகொள்ளும் தன்மை, எதிர்காலத்திற்கான தயார்நிலை ஆகியவற்றைப் பிரதிபலிக்கிறது,” என்று சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் தலைமை நிர்வாகி கோக் பிங் சூன் கூறினார்.
2025ஆம் ஆண்டிற்கு வர்த்தகங்கள் அதிக நம்பிக்கையுடன் இருந்தாலும், கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில் 66% மனிதவளச் செலவுகள்தான் அவற்றின் முதன்மையான கவலை என்று கூறின.
அதிகமான செலவுகளைச் சமாளிக்க, 51% நிறுவனங்கள் செலவுச் சிக்கன நடவடிக்கைகளை நிறுவியுள்ளன. 41% நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் கட்டணங்களை உயர்த்தின. மேலும் 30% நிறுவனங்கள் செயல்திறனுக்காக சரக்கு மேலாண்மையை மேம்படுத்தின.
தொடர்புடைய செய்திகள்
2023ல், 30% ஆக இருந்த வாடிக்கையாளர் தேவையின் நிச்சயமற்ற தன்மை, கடந்த ஆண்டு 45% ஆக உயர்ந்தது. ஹோட்டல்கள், உணவகங்கள், தங்குமிடங்கள், சில்லறை வர்த்தகம், மொத்த வர்த்தகம் போன்ற துறைகள் மிகவும் பாதிக்கப்பட்டன.
வாடகைச் செலவுகள் மூன்றாவது முக்கிய சவாலாக இருந்தது. 2023ல், 36% ஆக இருந்த வர்த்தக தரநிலை, 2024ல் 43% ஆக உயர்ந்தது.
வெளிநாட்டு ஊழியரணிக் கொள்கைகள் (40%), மனிதவளத்தின் இருப்பு (37%) ஆகியவை முக்கியக் கவலைகளாக இருந்தன. இது ஊழியரணி தொடர்பான பிரச்சினைகளில் இருக்கும் அழுத்தத்தைக் காட்டுகிறது.
நிறுவனங்கள் தங்கள் நிதித் தேவைகள் (35%), மனிதவள மேம்பாடு (34%), மற்றும் வர்த்தக மாற்றத்திற்கான மின்னிலக்கமயமாக்கல் (33%) ஆகியவற்றை நிர்வகிக்க அரசாங்க ஆதரவை நாடுகின்றன.
வரவுசெலவுத் திட்டம் 2025க்கான தங்களின் முதல் மூன்று விருப்பங்களாக, செலவு நெருக்கடிகளைச் சமாளித்தல் (64%), உள்ளூர் பணியாளர்களை ஈர்த்தல், தக்கவைத்தல் (43%), வெளிநாட்டு மனிதவளப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுதல் (41%) ஆகியவற்றை அவை பட்டியலிட்டுள்ளன.