சிங்கப்பூரில் செயல்படும் வர்த்தகங்கள் தங்களது மின்சார ஒப்பந்தத்தைப் புதுப்பிக்கும்போது ஏற்படும் கூடுதல் செலவுகளால் சிரமப்படுகின்றன.
இதனிடையே, புதிதாக வர்த்தகத்தைத் தொடங்குபவர்களும் மின்சாரத் விலை உயர்வால் சவால்களைச் சந்திக்கின்றனர்.
மத்திய கிழக்கில் ஈரானுக்கும் அமெரிக்கா - இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்றம் நீடிப்பதால் எரிசக்தி விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளது.
திறந்த மின்சாரச் சந்தையின் தரவின்படி, கால் பங்கிற்கும் குறைவான வர்த்தகங்கள் மட்டுமே சில்லறை விலைத் திட்டங்களைப் பயன்படுத்துகின்றன. தற்போது, விநியோகக் கட்டுப்பாடுகளின் காரணமாக அவை விலை உயர்ந்தவையாக மாறியுள்ளன.
“ சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் மின்சாரத்தை நாங்கள் வழங்குகிறோம். அவற்றின் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு கட்டணம் வசூலிக்கப்படுகிறது,” என்று ஃபுலோ எனர்ஜி (Flo Energy) தெரிவித்துள்ளது.
பொதுவாகச் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கான 12 மாத ஒப்பந்தத்தில் மாதம் 20,000 கிலோவாட்-ஹவர்ஸ் மின்சாரம் பயன்படுத்தினால் ஒரு கிலோவாட்-ஹவர்சுக்கு $0.25 வசூலிக்கப்பட்டது.
ஆனால் ஈரான் போர் காரணமாக மார்ச் மாதம் முதல் அந்த விலை அதிகரித்தது. ஒரு கிலோவாட்-ஹவர்சுக்கு $0.32 என விலை மாற்றப்பட்டது.
அதேபோல் 24 மாத ஒப்பந்தத்தில் ஒரு கிலோவாட்-ஹவர்சுக்கு $0.24 என இருந்த விலை இப்போது $0.30ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
36 மாத ஒப்பந்தத்தில் ஒரு கிலோவாட்-ஹவர்சுக்கு $0.24 என இருந்த விலை இப்போது $0.29ஆக உயர்ந்துள்ளது.
மின்சாரத்தின் விலை உலக அளவில் உள்ள மின்சாரச் சந்தையில் நடக்கும் நிலவரத்தைப் பொருத்து மாறுவதாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
துவாஸ் பவர் சப்ளை (Tuas Power Supply) பேச்சாளரும் மின்சார விலை அதிகரிப்பு குறித்துப் பேசியுள்ளார். “எரிபொருள் விலை கூடியுள்ளதால் சந்தை நிலவரத்திற்கு ஏற்றவாறு விலையை நிர்ணயிக்க வேண்டியுள்ளது,” என்று அவர் கூறினார்.

