மகள் பெயரில் உள்ள சொத்துகளுக்கான உரிமையை இழந்தார் தொழிலதிபர் பீட்டர் குவீ

மகள் பெயரில் உள்ள சொத்துகளுக்கான உரிமையை இழந்தார் தொழிலதிபர் பீட்டர் குவீ

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Nov 2026 - 8:04 pm

1 mins read

தம் மகளின் பெயரில் அறக்கட்டளை அடிப்படையில் வைக்கப்பட்டிருந்த ஐந்து சொத்துகளுக்கு உரிமை கோரி வாகனத் தொழிலதிபர் பீட்டர் குவீ தாக்கல் செய்த மேல்முறையீட்டை சிங்கப்பூர் மேல்முறையீட்டு நீதிமன்றம் புதன்கிழமை (நவம்பர் 18) தள்ளுபடி செய்தது.

கடன் கொடுத்தவர்களிடமிருந்து சொத்துகளை மறைக்கும் நோக்கத்துடன் குடும்ப உறுப்பினர்களின் பெயர்களில் சொத்துகளை வாங்கியதை குவீ ஒப்புக்கொண்டார்.

இவ்வாறு நேர்மையற்ற நோக்கத்துடன் அமைக்கப்படும் அறக்கட்டளை சட்டவிரோதமானது, பொதுக் கொள்கைக்கு எதிரானது என்பதால் அது செல்லாது என சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பளித்திருந்தது.

1995 முதல் 2000 வரை புக்கிட் தீமாவில் இரண்டு வீடுகள், கனடாவில் இரண்டு, ஆஸ்திரேலியாவில் ஒன்று என ஐந்து சொத்துகளை வாங்கி மகள் கேரன் குவீயின் பெயரில் அவர் பதிவு செய்திருந்தார்.

$4.1 மில்லியன் கடனுக்காக 2022 அக்டோபரில் கேரன் நொடித்துப்போனவராக அறிவிக்கப்பட்டார்.

இந்த வழக்கில் குவீ வெற்றி பெற்றிருந்தால், சொத்துகள் மூலம் கிடைக்கும் தொகை மகளுக்குக் கடன் கொடுத்தவர்களுக்குச் செல்வது தடுக்கப்பட்டிருக்கும். முன்னதாக 2025 மார்ச்சில், இச்சொத்துகளை மகளுக்குப் பரிசாக வழங்கியதாகக் கூறி உயர் நீதிமன்றம் குவீயின் கோரிக்கையை நிராகரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்