தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

குழந்தைகளுக்காக இணைய வர்த்தகத் தளங்களில் விற்கப்படும் பொருள்கள் குறித்து எச்சரிக்கை

1 mins read
3ac79b86-5c98-4b50-8585-9270efac4a88
இணைய வர்த்தகத் தளங்களின்வழி குழந்தைகளுக்காக விற்கப்பட்ட சில பொருள்கள் பாதுகாப்பற்றவை எனக் கண்டறியப்பட்டது. - படங்கள்: எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்

இணைய வர்த்தகத் தளங்களின்வழி குழந்தைகளுக்காக விற்கப்பட்ட சில பொருள்கள் பாதுகாப்பற்றவை எனக் கண்டறியப்பட்டதை அடுத்து, இவ்வாறு பொருள் வாங்கும்போது முன்னெச்சரிக்கையாக இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் ‘ஷாப்பி’, ‘லஸாடா’ ஆகிய தளங்களின் மூலம் விற்கப்பட்ட 23 பொருள் மாதிரிகளைச் சோதனையிட்டதில் 15 மாதிரிகள் பாதுகாப்பற்றவையாக அடையாளம் காணப்பட்டன என்று செப்டம்பர் 26ஆம் தேதி எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அதன் அறிக்கையில் தெரிவித்தது.

குழந்தைகள் பயன்படுத்துவதற்கான பொருள்கள், குழந்தை விளையாட்டுப் பொருள்கள் ஆகியவற்றில் இந்தப் பாதுகாப்புக் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டது.

சிறு சிறு பாகங்களாகப் பிரித்தெடுக்கக்கூடிய விளையாட்டுப் பொருள்களால் குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் போன்ற அபாயங்கள் நேரலாம். குழந்தைகள் படுத்தவாறு அல்லது நடந்தவாறு கால்களுக்குப் பயிற்சி பெறும் பொருள்கள் உறுதியற்றதாக இருக்கும்போது அப்பொருள்கள் கவிழ்ந்து குழந்தைகளுக்குக் காயம் விளைவிக்கலாம்.

இதற்கிடையே, இத்தகைய அபாயம் விளைவிக்கும் பொருள்களை விற்கும் வர்த்தகர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் அந்தப் பொருள்களைத் தங்களது வர்த்தகத் தளத்திலிருந்து அகற்றிவிட்டனர். அத்தகைய பொருள்களை யாரேனும் வாங்கியிருந்தால் அவற்றைப் பயன்படுத்துவதை உடனே நிறுத்துமாறு எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் கூறியுள்ளது.

பிள்ளைகள் பயன்படுத்தும் பாகங்களுடைய விளையாட்டுப் பொருள்கள் தொடர்பாக ஆண்டுக்குச் சராசரியாக 46 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதைக் கடந்த ஈராண்டுகளில் கேகே மகளிர், சிறார் மருத்துவமனை கண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. விளையாட்டுப் பொருள்களின் பாகங்களை விழுங்கியதை அடுத்து குடல்களில் அடைப்பு ஏற்படுதல், மூச்சுத்திணறலால் உயிரிழத்தல் ஆகிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

குறிப்புச் சொற்கள்