சிங்கப்பூரில் இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் பதிவான நான்கு கார்களில் ஒன்று பிஒய்டி (BYD) கார்கள்.
ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கொரியாவைச் சேர்ந்த வழக்கமான கார் நிறுவனங்களை சீனாவின் கார் நிறுவனங்களும் அமெரிக்காவின் டெஸ்லாவும் பின்னுக்குத் தள்ளியுள்ளன.
ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் புதிதாகப் பதிவான கார்களின் பதிவு குறித்து நிலப் போக்குவரத்து ஆணையம் வெள்ளிக்கிழமை (ஜூலை 24) வெளியிட்ட அறிக்கையில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
மின்சாரக் கார் நிறுவனங்களின் முன்னோடியான பிஒய்டி சிங்கப்பூர் கார்ச் சந்தையில் ஆதிக்கம் செலுத்துவதாகவும் முதன்மை கார் நிறுவனமாகத் திகழ்வதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
சிங்கப்பூரில் முதலாம் அரையாண்டில் பிஒய்டி நிறுவனத்தின் 6,828 கார்கள் பதிவாகியுள்ளன. இது, ஆண்டு அடிப்படையில் 46.3 விழுக்காடு அதிகம். மேலும், சிங்கப்பூரின் கார்ச் சந்தையில் 19.5 விழுக்காடாக இருந்த அதன் பங்கு 25.2 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
2025ஆம் ஆண்டு 4,667 பிஒய்டி கார்கள் இங்கு பதிவாயின.
இந்த அரையாண்டு காலத்தில் சிங்கப்பூரில் பதிவான ஒட்டுமொத்த கார்களின் எண்ணிக்கை 27,144. இது கடந்த ஆண்டின் முதலாம் அரையாண்டில் பதிவான எண்ணிக்கையைவிட 13.3 விழுக்காடு அதிகம்.
பிஒய்டி கார்களுக்கு அடுத்து டொயோட்டா இரண்டாம் நிலையில் உள்ளது. ஆறு மாதங்களில் அதன் 3,386 கார்கள் பதிவாயின. அது, ஆண்டு அடிப்படையில் 2.2 விழுக்காடு குறைவு.
அமெரிக்காவின் மின்சாரக் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா சிங்கப்பூரின் முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளது. கடந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களைக் காட்டிலும் இவ்வாண்டில் டெஸ்லா கார்களின் விற்பனை இரட்டிப்பாகி உள்ளது.
கடந்த ஆண்டு 1,419 டெஸ்லா கார்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இவ்வாண்டு அந்த எண்ணிக்கை 2,826 ஆனது.
பிஒய்டி (BYD) என்பது ‘Build Your Dreams’ (உங்கள் கனவுகளை உருவாக்குங்கள்) என்ற வார்த்தைகளின் சுருக்கம். 1994ஆம் ஆண்டு இந்நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டது.

