கிராப் வாகனமோட்டி ஒருவர் பயணியை ஏற்றிக்கொண்டு செல்லும்போது கைப்பேசியில் பேசிக்கொண்டே சென்றதால் அவரை அந்நிறுவனம் தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்கியுள்ளது.
கடந்த டிசம்பர் 5ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் குறித்து அந்த கிராப் வாகனத்தில் பயணம் செய்த பயணி, இதுகுறித்த காணொளி ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.
அதில், “பொறுப்பற்ற கிராப் ஓட்டுநர் வாகனமோட்டும் போது தொடர்ச்சியாகக் கைப்பேசியில் பேசிக்கொண்டும் குறுந்தகவல் அனுப்பிக் கொண்டும் இருந்தார். அவரது செயலில் ஒரு சிறு பகுதியே இந்தக் காணொளி என்று குறிப்பிட்டிருந்தார்.
“இந்தச் சம்பவம் குறித்து கிராப் நிறுவனத்திற்குத் தெரிவித்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், என்னைச் சமாதானப்படுத்தும் வகையில் ஒரு தயார்செய்யப்பட்ட கடிதத்தை அனுப்பியிருந்தனர்.
“அந்தக் கடிதத்தால் நான் திருப்தியடையவில்லை என்று கூறியதும் அதே கடிதத்தை மீண்டும் ஒரு முறை எனக்கு அனுப்பி வைத்தனர்,” என்று பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) இதுகுறித்து ‘ஸ்டாம்ப்’ இணைய இதழின் கேள்விக்குப் பதில் அளித்த கிராப் நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர், “பயணிகளின் பாதுகாப்புக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். கிராப் வாகனம் ஓட்டுநர், நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியுள்ளது அந்தக் காணொளி மூலம் தெரியவந்துள்ளது,” என்றார்.
“அந்த ஓட்டுநரின் சேவையைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். அத்துடன் பாதிக்கப்பட்ட பயணியிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதோடு அவர் செலுத்திய போக்குவரத்துச் சேவைக் கட்டணத்தை முழுமையாகத் திருப்பிச் செலுத்திவிட்டோம்,” என்று அவர் கூறியுள்ளார்.
“வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்துவது அல்லது கைப்பேசியை கையில் வைத்திருப்பது போன்றவை போக்குவரத்துச் சட்டத்தை மீறும் செயலாகும். அத்துடன் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய செயல்.
தொடர்புடைய செய்திகள்
“கிராப் வாகனமோட்டி நிறுவனத்தின் நடத்தை விதிமுறைகள் மற்றும் சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை மீறியது தெரியவந்தால் அந்த ஓட்டுநர் கிராப் சேவையளிப்பதில் நிரந்தரமாக தடைசெய்யப்படலாம்,” என்று அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்கீழ், வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பயன்படுத்துவது குற்றமாகும். இதுபோன்ற குற்றம் புரிவோருக்கு $1,000 அபராதம் அல்லது ஆறு மாதச் சிறைத் தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.