டாக்சியின் பின்பகுதி கண்ணாடியின்மீது ஒருவர் பெரிய கல் ஒன்றை வீசியதில், அந்த டாக்சியை ஓட்டிய 59 வயது ஆடவரும் அவருடைய ஏழு வயது மகனும் காயமடைந்தனர்.
எண் 201 பூன் லே வே அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு 7.50 மணியளவில் இச்சம்பவம் நடந்தது. இந்த விபத்தில் காயமடைந்த இருவரும் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
தன் மகனை இரவு உணவுக்காக வெளியே அழைத்துச் சென்றபோது இத்தாக்குதல் நடந்ததாக திரு சென் என மட்டுமே அறியப்பட விரும்பும் டாக்சி ஓட்டுநர் ஷின் மின் நாளிதழிடம் கூறினார்.
தான் யுவன் சிங் ரோடு வழியாக பூன் லே சென்றுகொண்டிருந்தபோது 50 அல்லது 60 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவர் தனியார் பேருந்து ஒன்றைக் கையசைத்து நிறுத்த முயன்றார் எனவும் ஆனால் அப்பேருந்து நிற்காமல் சென்றுவிட்டது எனவும் அவர் ஷின் மின்னிடம் கூறினார்.
அந்த ஆடவர் பாதுகாவலர் சீருடையில் இருந்ததாகவும் முதுகில் பை ஒன்றைச் சுமந்து நின்றதாகவும் கையில் ஏதோ ஒரு பொருளை வைத்திருந்ததாகவும் திரு சென் கூறியதாக ஷின் மின் குறிப்பிட்டது.
அந்த வழியாக வந்த தமது டாக்சியை அந்த ஆடவர் நிறுத்த முற்பட்டதாகவும் தாம் பயணிகளை ஏற்றவில்லை என அவரிடம் தாம் கூறியதாகவும் திரு சென் கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த ஆடவர், தன் கையில் வைத்திருந்த பொருளைக் கொண்டு தன் டாக்சி கண்ணாடியை உடைத்ததாக திரு சென் சொன்னார்.

