பயணியைத் தள்ளியதாக வாடகை கார் ஓட்டுநர்மீது குற்றச்சாட்டு

1 mins read
ec799b59-009b-457d-8a8e-5485debebae7
திரு ஆலன் வோங்கை தனியார் வாடகை கார் ஓட்டுநரான டோக் வீ ஹூங் பின்னோக்கித் தள்ளியதாகக் கூறப்படுகிறது. - படம்: ஸ்டோம்ப்

பயணியிடம் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாக சந்தேகிக்கப்படும் தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்மீது நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை குற்றஞ்சுமத்தப்பட்டது.

அந்த 53 வயதான தனியார் வாடகைக் கார் ஓட்டுநரின் பெயர் டோக் வீ ஹூங்.

தன் காரில் பயணம் செய்த 59 வயதான ஆலன் வோங்கை டோக் மூர்க்கத்தனமாகத் தள்ளியதாகத் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் கடந்த ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி காலை 5.20 மணியளவில் சாங்கி நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் நடந்ததாக தெரிவிக்கப்பட்டது.

‘சிட்டிகேப்’ ஓட்டுநராகயிருந்த டோக், திரு வோங்கைக் காரிலிருந்து வெளியே இழுத்து அவரைப் பின்னோக்கித் தள்ளினார் எனவும் அதனால் வோங் சாலைத் தடுப்பின்மீது மோதி பின்னோக்கியபடியே வாய்க்காலில் விழுந்ததாகவும் நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இவ்வழக்கு வரும் பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், மூர்க்கத்தனமாக தாக்கி காயம் ஏற்படுத்திய குற்றத்திற்காக டோக்கிற்கு ஓர் ஆண்டு வரை சிறைத்தண்டனையும் $5,000 வரை அபராதமும் விதிக்கப்படலாம்.

குறிப்புச் சொற்கள்