கேர்ன்ஹில் சர்க்கிள் பகுதியில் இருந்து சிலேத்தார் விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் மத்திய விரைவுச்சாலைக்கான நுழைவுப்பாதையில் திங்கட்கிழமை (அக்டோபர் 12) காரும் வேனும் மோதி விபத்துக்குள்ளாகின.
விபத்தையடுத்து அந்த வேன் சாலையின் பக்கவாட்டில் கவிழ்ந்தது.
பிற்பகல் 2 மணியளவில் விபத்து குறித்துத் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினரும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினரும் தெரிவித்தனர்.
காயமடைந்த வேன் ஓட்டுநரான 53 வயது ஆடவரும் காரை ஓட்டிய 51 வயதுப் பெண்ணும் சுயநினைவுடன் டான் டொக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
கார் ஓட்டுநர் விசாரணையில் உதவிவருவதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான காணொளியில், கவிழ்ந்த வேனின் கதவைத் திறந்து ஓட்டுநர் வேறு இருவரின் உதவியுடன் வெளியேறுவது பதிவாகியுள்ளது.
இந்த விபத்தைத் தொடர்ந்து மத்திய விரைவுச்சாலைக்கான கேர்ன்ஹில் சர்க்கிள் நுழைவுப்பாதை மூடப்பட்டதாக நிலப் போக்குவரத்து ஆணையம் பிற்பகல் 2.13 மணிக்கு எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் அறிவித்தது.
