இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள், தொழில்நுட்பக் குறைபாடுகளைச் சரிசெய்வதோடு மட்டும் நின்றுவிடாமல் முடிவுகளை எடுக்கும்போது நிறுவனங்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்துகளைப் புரிந்துகொள்ள வேண்டும்.
அத்துடன் அவர்கள், வணிக முன்னுரிமைகளுக்கு ஏற்பச் சாதக பாதகங்களைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
அடுத்த மூன்று ஆண்டுகளில் அனைத்து நிலைகளிலும் உள்ள இணையப் பாதுகாப்பு வல்லுநர்களுக்குத் தேவைப்படும் மிக முக்கியத் திறனாக இதுவே கணிக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) எவ்வாறு இணையப் பாதுகாப்புப் பணிகளை உருமாற்றுகிறது என்பது குறித்த புதிய கருத்தாய்வு முடிவுகளில் அது தெரியவந்துள்ளது.
சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பு கருத்தாய்வை மேற்கொண்டது. அதில் ஆயிரம் நிறுவனங்கள் பங்கெடுத்தன.
அச்சுறுத்தல்களைத் திறம்பட மதிப்பிடவும் பாதிப்புகளைக் கணிக்கவும் சரியான முடிவுகளை எடுக்க வழிகாட்டவும் இணையப் பாதுகாப்பு வல்லுநர்கள் தங்கள் துறையில் வலுவான தொழில்நுட்ப அனுபவத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்றும் கருத்தாய்வு கண்டறிந்தது.
குறிப்பாக, ஏஐ தொடர்பான திறன்கள் மூன்றாவது மிக முக்கியத் திறனாக மதிப்பிடப்பட்டுள்ளன.
ஏஐ மூலம் நடத்தப்படும் இணைய அச்சுறுத்தல்களைச் சிறப்பாகக் கண்டறிந்து அதற்குப் பதிலடி கொடுக்க அவை கைகொடுக்கும் என்று கூறப்பட்டது.
ஏஐ தொழில்நுட்பம், இணையப் பாதுகாப்புப் பணிகளை விரைவுபடுத்துவதன் மூலம் வேலைச்சுமையைக் குறைத்தாலும் எச்சரிக்கைகள் நம்பகமானவையா, அச்சுறுத்தல்கள் உண்மையானவையா என்பதைத் தீர்மானிக்க மனிதர்களின் பங்களிப்பு இன்னும் தேவைப்படுவதாகக் கருத்தாய்வு தெரிவித்தது.
‘ஏஐ யுகத்திற்கான சிங்கப்பூரின் இணையப் பாதுகாப்பு ஊழியரணியை உருவாக்குதல்’ என்ற அறிக்கை செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 13) நடைபெற்ற ‘சிங்கப்பூர் அனைத்துலக இணைய வாரத்தில்’ வெளியிடப்பட்டது.
ஏஐ தொழில்நுட்பம் இணையப் பாதுகாப்பை மிக வேகமாக உருமாற்றி வருவதால், அடுத்த 12 மாதங்களுக்குள் வல்லுநர்கள் ஏஐ சார்ந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நேரிடும் என்றும் அதற்குப் புதிய திறன்களைப் பெற வேண்டியிருக்கும் என்றும் கருத்தாய்வு கண்டறிந்துள்ளது.
இந்தக் கண்டுபிடிப்புகள், சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு அமைப்பின் புதிய அங்கீகாரக் கட்டமைப்புக்குப் புதிய தொழில்முறைத் தரநிலைகளை உருவாக்க உதவும்.
பல்வேறு பணிகள், திறன் நிலைகளுக்கான பொதுவான தொழில்முறைத் தரத்தை நிர்ணயிக்கும்; அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டின் இரண்டாம் காலாண்டில் இருந்து விருப்ப அடிப்படையில் ஈராண்டுகால அங்கீகார முன்னோடித் திட்டம் தொடங்கப்படும்.
‘இணையப் பாதுகாப்பு நிபுணத்துவ அங்கீகாரக் கட்டமைப்பு’ எனும் அது, சிங்கப்பூரின் புதுப்பிக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு உத்தியின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கும்.
தகவல், மின்னிலக்க மேம்பாட்டு மூத்த துணை அமைச்சர் டான் கியட் ஹாவ், அதனைச் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
“வேலை மாறும்போது, தொழிலும் அதற்கேற்ப மாற வேண்டும். நமது மக்கள் தாங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய திறன்களைப் பற்றிய தெளிவைப் பெற வேண்டும். நிறுவனங்கள் சிறந்த திறனாளர் ஒருவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றிய தெளிவான புரிதலைக் கொண்டிருக்க வேண்டும்.
“மேலும், பயிற்சி அளிப்பவர்கள் தொழில்துறைக்கு அடுத்து என்ன தேவை என்பதை அறிந்திருக்க வேண்டும்,” என்று திரு டான் கூறினார்.
