புதைபடிவ எரிபொருளைத் தொடர எரிசக்தி மாநாட்டில் அழைப்பு

புதைபடிவ எரிபொருளைத் தொடர எரிசக்தி மாநாட்டில் அழைப்பு

1 mins read
8c78c552-fcac-4be9-a388-6db1ce7155ed
சவூதி அரேபியாவின் ஆகப்பெரிய எண்ணெய் நிறுவனமான ஆரம்கோவின் தலைவர் அமின் நாசர், சிங்கப்பூர் மாநாட்டில் உரையாற்றினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

புதைபடிவ எரிபொருளில் இருந்து விலகிச் செல்வது என்பது முன்னேறும் நாடுகளுக்கு இயல்பான ஒன்றாக இருக்காது என்றும் செலவை அதிகரிக்கக்கூடியது என்றும் சிங்கப்பூரில் நடைபெற்ற எரிசக்தி மாநாட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திங்கட்கிழமை (அக்டோபர் 21) தொடங்கிய அந்த மாநாட்டில் ஆகப்பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ‘ஆரம்கோ’வின் (Aramco) தலைவரான அமின் நாசர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

தூய எரிசக்தி வளங்கள் பாரம்பரிய புதைபடிவ எரிசக்திக்கு மாற்றாக ஒருபோதும் இருக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டார்.

அதேநேரம், புதிதாக தோற்றுவிக்கப்படும் எரிசக்தி வளங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற மாற்றுத்தன்மை கொண்டதா என்பதை உறுதி செய்வது முக்கியம் என்றார், சவூதி அரேபிய அரசாங்கத்துக்குச் சொந்தமான ‘ஆரம்கோ’வின் தலைமை நிர்வாகியுமான திரு நாசர்.

“எரிசக்தி உருமாற்றத்தைக் காட்டிலும் கூடுதல் எரிசக்தி பற்றியே நாம் பேசுகிறோம். அது மாற்று எரிபொருளுக்கான வளர்ச்சியாக இருக்குமே தவிர காலம் காலமாக இருக்கக்கூடிய எரிசக்தியின் இடத்தை அது எந்த வகையிலும் பிடித்துவிட முடியாது,” என்றார் அவர்.

வருடாந்திர சிங்கப்பூர் அனைத்துலக எரிசக்தி வாரத்தை முன்னிட்டு மரினா பே சேண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்று வரும் மாநாடு வெள்ளிக்கிழமை (அக்டோபர் 25) வரை நடைபெறும். கரிம ஒழிப்பில் மாநாடு அதிகம் கவனம் செலுத்துகிறது.

குறிப்புச் சொற்கள்