அனைத்துலக அளவில் வெவ்வேறு விதங்களில் உருமாறும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஒரே நோக்கம் கொண்ட நாடுகள் பங்காளித்துவ உறவுகளை ஏற்படுத்திக்கொள்ளும்படி தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் அழைப்புவிடுத்துள்ளார்.
பன்னாட்டு ஒத்துழைப்புகளை வலுப்படுத்த நீக்குப்போக்கான கட்டமைப்புகள் அவசியம் என்றார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை (மே 31) ஷங்ரிலா கலந்துரையாடலில் பேசிய திரு சான், பன்னாட்டு நிறுவனங்கள் அனைத்துலக ஒத்துழைப்புகளின் தூண்கள் என்று வலியுறுத்தினார்.
ஒரே சிந்தனையுள்ள நாடுகளுடன் பிற நாடுகள் நீக்குப்போக்கான பங்காளித்துவ உறவுகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்றார் திரு சான்.
அத்தகைய பங்காளித்துவ உறவுகள் மூலம் இணையப் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு போன்ற உருமாறும் அனைத்துலக களங்களில் நாடுகள் அவற்றின் நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முடியும் என்று திரு சான் வலியுறுத்தினார்.
அந்த வகையில், செயற்கை நுண்ணறிவை ராணுவத்தில் பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடலை அனைத்துலக அளவில் தொடங்க நெதர்லாந்து, தென் கொரியா ஆகிய நாடுகளுடன் இணைந்து சிங்கப்பூர் எவ்வாறு செயல்பட்டது என்பதைத் திரு சான் சுட்டினார்.
இணையப் பாதுகாப்பைப் பொருத்தவரை, ஆசியான் தற்காப்பு அமைச்சர்களுடன் இணைந்து தலைசிறந்த இணையப் பாதுகாப்பு, தகவல் நிலையத்தை 2023ஆம் ஆண்டு சிங்கப்பூர் அறிமுகப்படுத்தியதைத் திரு சான் குறிப்பிட்டார்.
இணையத் தாக்குதல்கள், போலித் தகவல்கள் ஆகியவற்றை ஆசியான் தற்காப்பு அமைப்புகள் இன்னும் திறம்படக் கையாள அந்த நிலையம் உதவுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தொலைத்தொடர்பு, எரிசக்தி கம்பிவடங்கள் போன்ற கடலுக்கு அடியில் உள்ள உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பதற்கான நடைமுறைகளையும் அமைப்பதற்கான அவசரத் தேவையைச் சிங்கப்பூர் உணர்ந்திருப்பதாகவும் திரு சான் கூறினார்.
அத்தகைய கட்டமைப்புகளைப் பாதுகாக்க சிங்கப்பூர் அறிமுகம் செய்த 17 நாடுகள் அடங்கிய திட்டம் குறித்து திரு சான் விளக்கம் அளித்தார். அந்தத் திட்டத்தைச் சிங்கப்பூர் வழிநடத்துகிறது.
சனிக்கிழமை (மே 30) இடம்பெற்ற ஷங்ரிலா கலந்துரையாடலின்போது கடலடி உள்கட்டமைப்புத் தற்காப்புப் பரிமாற்றங்களுக்கான வழிகாட்டிக் கொள்கைகள் அறிமுகம் செய்யப்பட்டன.
கடலடிப் பாதுகாப்புச் சவால்களை வட்டார நாடுகள் கையாள்வதற்கு அந்த வழிகாட்டிக் கொள்கைகள் உதவுகின்றன.
பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்த தகவல்களை முன்கூட்டியே பகிர்ந்துகொள்ள அந்தக் கொள்கைகள் வகைசெய்கின்றன.
ஷங்ரிலா கலந்துரையாடலில் பாதுகாப்பு, முன்னேற்றம் ஆகியவைத் தொடர்பான முக்கிய கொள்கைகளை மேம்படுத்துவது குறித்தும் திரு சான் பேசினார்.
உலக அளவில் உருமாறும் சர்ச்சைகளுக்கு இடையே உள்நாட்டு அரசியலைச் சரிவரக் கையாள்வதன் முக்கியத்துவத்தைத் திரு சான் மேற்கோள்காட்டினார்.

