மோசமான சளிக்காய்ச்சலுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பவர்கள் சளிக்காய்ச்சல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
65 வயதைத் தாண்டியவர்கள், ஐந்துக்குக் குறைவான வயதுடைய குழந்தைகள் உள்ளிட்டோர் அத்தகையோரில் அடங்குவர். கடந்த ஆகஸ்ட் மாத இறுதியிலிருந்து சிங்கப்பூரில் சளிக்காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்துவருவதையொட்டி இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
பாதிப்புக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம் உள்ளவர்கள் 2026 பூமியின் தெற்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்தில் பரவும் சளிக்காய்ச்சலுக்கான தடுப்பூசியைப் (2026 Southern Hemisphere seasonal influenza vaccine) போட்டுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சும் தொற்றுநோயைக் கண்டறிதல், கட்டுப்படுத்தல், தவிர்த்தலுக்கான அமைப்பும் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) வெளியிட்ட கூட்டறிக்கையில் கேட்டுக்கொண்டன. ஏற்கெனவே அந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதோருக்கு இது பொருந்தும்.
தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளும் இடங்கள்
ஏற்கெனவே மற்ற உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆளாகியிருப்போரும் அத்தகையோரில் அடங்குவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதிபெறும் பலதுறை மருந்தகங்கள், சமூக, சுகாதார உதவித் திட்டத்தில் (சாஸ்) இடம்பெறும் தனியார் மருந்தகங்களில் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
சிங்கப்பூரில் சளிக்காய்ச்சல் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகத் தொற்றுநோயைக் கண்டறிதல், கட்டுப்படுத்தல், தவிர்த்தலுக்கான அமைப்பு கடந்த செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 1) தெரிவித்தது. அதேவேளை, பொதுவாகப் பரவும் சளிக்காய்ச்சல் தொற்றைவிட தற்போதைய தொற்றுக்கான அறிகுறிகள் மேலும் மோசமாக இருப்பதாகத் தெரியவில்லை என்றும் அது குறிப்பிட்டது.
அந்தந்தப் பருவத்தில் காணப்படும் சளிக்காய்ச்சல் சம்பவங்கள் ஆண்டு முழுவதும் பதிவாகும். குறிப்பாக மே முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலும் டிசம்பர் முதல் மறுஆண்டு மார்ச் மாதம் வரையிலும் சம்பவங்கள் கூடுதலாகப் பதிவாகும் என்பது தேசிய கண்காணிப்புப் புள்ளிவிவரங்களில் தெரியவந்துள்ளது.
தடுப்பூசிகள் தயாராவதில் தாமதம்
சளிக்காய்ச்சல் அதிகம் பரவும் காலமான அக்டோபர் முதல் மார்ச் மாதத்துக்கு இடைப்பட்ட காலத்துக்கான பூமியின் வடக்கு அரைக்கோளத்தில் குளிர்காலத்தில் பரவும் சளிக்காய்ச்சலுக்கான தடுப்பூசி வரும் அக்டோபர் மாதத் தொடக்கத்தில் தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்போதும் இருப்பதைவிட இரண்டு வாரங்கள் தாமதமாக அந்தத் தடுப்பூசி இம்முறை தயாராக இருக்கும். மருந்து நிறுவனங்கள் விநியோகிக்கும் பொருள்கள் தொடர்பிலான தகவல்கள் இதைத் தெரிவிப்பதாக சுகாதார அமைச்சும் அமைப்பும் கூறின.
ஆக அண்மைய சளிக்காய்ச்சல் தொற்றுக்கான தடுப்பூசிகளைத் தயார்செய்வதில் பொதுவாக அத்துறையிலேயே தாமதம் ஏற்பட்டுள்ளது.


