தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

எஸ்ஜி60 திட்டத்தின்கீழ் சமூக உண்டியலுக்கு மாதந்தோறும் நன்கொடை வழங்க அழைப்பு

2 mins read
ff730800-dd17-49c8-9c07-ec65133758bd
(இடமிருந்து) தேசிய சமுதாய சேவை மன்ற தலைமை நிர்வாகி டான் லி சான், சமூக உண்டியல் தலைவர் சியூ சுடாட், துணைப் பிரதமர் கான் கிம் யோங், சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி மற்றும் தேசிய சமுதாய சேவை மன்ற தலைவர் திருவாட்டி அனித்தா ஃபாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சமூக உண்டியலுக்கு மாதந்தோறும் சிறிய அளவு நன்கொடை வழங்க சிங்கப்பூரர்களை ஊக்குவிக்கும் திட்டம் ஒன்று சனிக்கிழமை (ஜனவரி 18ஆம் தேதி) அறிமுகம் செய்யப்பட்டது.

சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் எஸ்ஜி60 நினைவாண்டை ஒட்டி இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய திட்டம் 1984ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சமூக உண்டியல் பகிர்வுத் திட்டதின்கீழ் தனிநபர்கள், ஊழியர்கள் என அனைவரும் மாதந்தோறும் தங்கள் ஊதியத்தில் ஒரு சிறு பகுதியை நன்கொடையாக வழங்க ஊக்குவிப்பதை விரிவுபடுத்தும் நோக்கம் கொண்டது.

இந்த விரிவுபடுத்தப்பட்ட எஸ்ஜிஷேர் திட்டம் மாதந்தோறும் நன்கொடை வழங்குவதை எளிமைப்படுத்தும் என்று சமூக உண்டியல் தலைவர் சியூ சுடாட் விளக்கினார்.

இதன்மூலம் சமூக உண்டியல் அரசு அமைப்புகள்,நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் உயர் கல்விக் கழகங்கள் ஆகியவற்றுடன் இணைந்து பங்களிப்பு வழங்க ஏதுவாக கூடுதல் தளங்களையும் வாய்ப்புகளையும் உருவாக்கித்தர முயற்சிகள் மேற்கொள்ளும் என்று அந்த அமைப்பு செய்திக் குறிப்பு ஒன்றில் கூறியுள்ளது.

ஏற்கெனவே உள்ள பழைய பகிர்வு திட்டத்தில் நன்கொடை பெறுவது என்பது பெரும்பாலும் முதலாளிகளின் மூலமாகவே இருந்தது என்று திரு சியூ சுடாட் சுட்டினார்.

இந்த சமூக உண்டியல் அமைப்பு 1983ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அது தேசிய சமூக சேவை மன்றத்தின் கொடைப் பிரிவாக விளங்குகிறது.

எஸ்ஜிஷேர் திட்டத்தை சிங்கப்பூர் எக்ஸ்போ கூடத்தில் சனிக்கிழமை (ஜனவரி 18ஆம் தேதி) தொடங்கி வைத்த துணைப் பிரதமர் கான் கிம் யோங், இந்தத் திட்டத்தில் ஏறத்தாழ 260,000 கொடையாளர்களும் 2,000 நிறுவனங்களும் பழைய பகிர்வுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ளனர் என்று சொன்னார். இவர்கள் ஆண்டுதோறும் $15 மில்லியனுக்கும் மேலாக நன்கொடை வழங்குகின்றனர் என்று திரு கான் தெரிவித்தார்.

இந்த நன்கொடை 82,000 பேர் பயன்பெறும் 200க்கும் மேற்பட்ட முக்கிய திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதாக துணைப் பிரதமர் தெளிவுபடுத்தினார். அவற்றில் உடற்குறையுள்ளோர் சுதந்திரமாக இயங்க அவர்களுக்கு வழங்கப்படும் ஆலோசனைச் சேவை, குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு தரப்படும் சமுதாய ஆதரவு ஆகியவை அடங்கும் என்று அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்