தற்காப்புச் செலவு உயரும் வேளையில் நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர உறுதிப்பாட்டுக்கு அழைப்பு

தற்காப்புச் செலவு உயரும் வேளையில் நாடுகளுக்கு இடையிலான பரஸ்பர உறுதிப்பாட்டுக்கு அழைப்பு

2 mins read
5e07e4c8-b9ad-4fdc-927c-ad5a9093c2b2
சிங்கப்பூரில் மே 29ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெறும் 23வது ஷங்ரிலா கலந்துரையாடல் மாநாட்டின் ஒரு பகுதியாக, 31 நாடுகளின் அமைச்சர்கள், பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்ட உயர்மட்ட வட்டமேசை விவாதத்தை அமைச்சர் சான் சனிக்கிழமையன்று (மே 30) நடத்தினார். - படம்: தற்காப்பு அமைச்சு

உலக நாடுகள் அவற்றின் தற்காப்புச் செலவினங்களை அதிகரிக்கும் அதே வேளையில், ஒன்றுக்கொன்று நம்பிக்கையூட்டும் மற்றும் உறுதியளிக்கும் முயற்சிகளையும் அதற்கு இணையாக அதிகரிக்க வேண்டும் என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் வலியுறுத்தியுள்ளார்.

சிங்கப்பூரில் மே 29ஆம் தேதி முதல் மே 31ஆம் தேதி வரை நடைபெறும் 23வது ஷங்ரிலா கலந்துரையாடல் மாநாட்டின் ஒரு பகுதியாக, 31 நாடுகளின் அமைச்சர்கள், பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்ட உயர்மட்ட வட்டமேசை விவாதத்தை அமைச்சர் சான் சனிக்கிழமையன்று (மே 30) நடத்தினார்.

“ஒரு நாட்டின் அதிகரித்த தற்காப்பு உணர்வு என்பது மற்ற நாடுகளின் பாதுகாப்பின்மையையும் அச்சத்தையும் விலையாகக் கொடுத்துப் பெறப்படுவதாக அமைந்துவிடக்கூடாது” என்று இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சான் சுட்டிக்காட்டினார்.

மிகவும் வெளிப்படையான மற்றும் துடிப்பான முறையில் அமைந்த இக்கலந்துரையாடலில், நாடுகளுக்கு இடையே எவ்வாறு நம்பிக்கையை உருவாக்குவது என்பது குறித்தும் பல முக்கிய விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கலந்துரையாடலில் அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் பீட் ஹெக்செத், ஆஸ்திரேலியத் துணைப் பிரதமரும் தற்காப்பு அமைச்சருமான ரிச்சர்ட் மார்லெஸ், ஜப்பானியத் தற்காப்பு அமைச்சர் ஷின்ஜிரோ கொய்சுமி உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் பங்கேற்றனர்.

தற்காப்புத் துறையில் நீண்டகால முதலீடுகளை மேற்கொள்வதற்குத் தேவையான அரசியல் அர்ப்பணிப்பு மற்றும் பொதுமக்களின் ஆதரவைப் பெறுவது குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இது குறித்துப் பேசிய அமைச்சர் சான், தற்காப்பு என்பது ஒரு நீண்டகால வணிகம் போன்றது என்றும் இதில் முதலீடுகளை ஒரேயடியாகக் குவிப்பதோ அல்லது முற்றிலும் தவிர்ப்பதோ சாத்தியமில்லை என்றும் கூறினார்.

மாறாக, தற்காப்புத் திறன்களைக் கட்டமைக்கத் தொடர்ச்சியான மற்றும் நிலையான நிதி ஒதுக்கீடு அவசியமாகும். மேலும், இந்தத் துறையில் திறமையான மனிதவளத்தை ஈடுபடுத்துவது மற்றும் நீண்டகால தொழில்சார் உற்பத்தித் திறனை மேம்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

போர்முறையில் ஏற்பட்டு வரும் தொழில்நுட்ப மற்றும் செயல்பாட்டு மாற்றங்களை எவ்வாறு கையாள்வது என்பது குறித்தும் அமைச்சர்கள் ஆலோசித்தனர். இதில், ஆயுதப்படைகளில் அதிநவீன தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது, வழக்கமான ராணுவத் தளவாட விநியோகிப்பாளர்களை மட்டும் சாராமல், புத்தாக்கமிக்க புதிய நிறுவனங்களை உள்ளடக்கி எவ்வாறு செலவுக்கேற்ற மதிப்பை வாடிக்கையாளர்களுக்குப் பெற்றுத் தருவது போன்ற அம்சங்கள் இடம்பெற்றன.

எதிர்காலப் பூசல்கள் மற்றும் தவறான புரிதல்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க, தொடர்ச்சியான உத்திபூர்வ பேச்சுவார்த்தைகளும் நடைமுறைக்குச் சாத்தியமான ஒத்துழைப்புகளும் மிக முக்கியமானவை என்று இக்கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புக்கொள்ளப்பட்டது.

அத்துடன், வட்டார அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் ஆசியான் போன்ற கூட்டமைப்புகளின் வழியாக மேற்கொள்ளப்படும் வட்டார நாடுகளின் ஒத்துழைப்புகளின் முக்கியத்துவத்தையும் தற்காப்பு அமைச்சு தனது அறிக்கையில் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது.

குறிப்புச் சொற்கள்