உங்களை அழைக்கும் நபர் உண்மையிலேயே காவல்துறையைச் சேர்ந்தவர்தான் என்பதை எப்படி அறிந்துகொள்வது?
2026 ஏப்ரலில், தன்னைச் சிங்கப்பூர்க் காவல்துறை அதிகாரி என்று கூறிக்கொண்ட ஒருவர் 67 வயதான ஜான்சனின் வீட்டுத் தொலைபேசிக்கு அழைத்தபோது, ஜான்சன் அதைத்தான் கண்டறிய வேண்டியிருந்தது. தனிப்பட்ட காரணங்களுக்காகத் தனது குடும்பப் பெயரைப் பகிர மூத்த செயல்பாட்டு மேற்பார்வையாளரான அவர் மறுத்துவிட்டார்.
வெளிநாட்டுப் பணமோசடி விசாரணை ஒன்றில் ஜான்சனின் வங்கிக் கணக்கு விவரங்கள் சிக்கியுள்ளதாக அழைத்தவர் கூறினார்.
2025ஆம் ஆண்டின் பிற்பகுதியில் தான் இந்தியா மற்றும் மலேசியாவிற்கு மேற்கொண்ட பயணங்களே ஜான்சனின் நினைவுக்கு முதலில் வந்தன. அங்கு தனது விவரங்கள் திருடப்பட்டிருக்குமோ என அவர் எண்ணினார்.
பின்னர் அவருக்குத் திடீரெனப் பொறி தட்டியது. இது போன்ற மோசடி அழைப்புகள் குறித்து நண்பர்கள் ஏற்கனவே அவரை எச்சரித்திருந்தனர். மேலும், அழைத்தவரின் உச்சரிப்பும் வெளிநாட்டவரைப் போல இருந்ததாக அந்தச் சிங்கப்பூரர் கூறுகிறார்.
அவர் இணைப்பைத் துண்டித்தார். “அது உண்மையிலேயே காவல்துறையாக இருந்தால், அவர்கள் வேறு வழிகளில் என்னைத் தொடர்பு கொள்வார்கள்,” என்கிறார் பெரும்பாலும் தனது கைப்பேசியைப் பயன்படுத்தும் ஜான்சன்.
இருப்பினும், சந்தேகங்கள் அவரைத் தொடர்ந்து வாட்டின. “நான் உண்மையிலேயே ஏதேனும் சிக்கலில் மாட்டிக்கொண்டேனா என்று நான் தொடர்ந்து யோசித்துக்கொண்டே இருந்தேன்.”
தனிப்பட்ட ஒரே எண்
2026 நவம்பர் 2 முதல், பொதுமக்களுக்குச் சிங்கப்பூர்க் காவல்துறையிடமிருந்து வரும் அதிகாரபூர்வத் தொலைபேசி அழைப்புகள் 6000 0999 என்ற எண்ணிலிருந்து மட்டுமே வரும் என்று இணையப் பாதுகாப்புப் பிரிவின் கீழ் உள்ள காவல்துறை மோசடிப் பொதுக் கல்வி அலுவலகத்தின் உதவி இயக்குநர், காவல் கண்காணிப்பாளர் டே யுவான்கி தெரிவித்தார்.
ஆள்மாறாட்டம் செய்பவர்களிடமிருந்து உண்மையான அதிகாரிகளை மக்கள் அடையாளம் காண உதவுவதே இதன் நோக்கமாகும் என்றும் அவர் கூறினார்.
ஒவ்வொரு அழைப்பிற்கும் பிறகு – அது எடுக்கப்படாவிட்டாலும் கூட – “gov.sg” என்ற அனுப்புநர் அடையாளத்திலிருந்து ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
சிங்கப்பூர்க் காவல்துறையை எவ்வாறு தொடர்புகொள்வது என்பதை அந்தக் குறுஞ்செய்தி விளக்கும்; மேலும், வழக்கமாக அதில் அதிகாரியின் பெயரும், திரும்ப அழைப்பதற்கான தொடர்பு எண்ணும் இடம்பெற்றிருக்கும். அக்குறுஞ்செய்தி அமைப்பின் முழுப் பெயருடன் தொடங்கி, அது அரசாங்கத்திடமிருந்து அனுப்பப்படும் தானியங்கிச் செய்தி என்ற குறிப்புடன் நிறைவடையும்.
இந்த எண் காவல்துறையிடமிருந்து வெளியே செல்லும் அழைப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்; வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் போன்ற குறுஞ்செய்தித் தளங்களில் இது பயன்படுத்தப்படாது என்று டே கூறினார்.
தனிப்பட்ட ஒரே எண்ணின் மூலம் பொதுமக்களுக்கு அழைப்புகளை மேற்கொள்ளும் முதல் அரசாங்க அமைப்பு சிங்கப்பூர் காவல்துறையே ஆகும். பிற அமைப்புகளும் படிப்படியாக இதைப் பின்பற்றும் என எதிர்பார்க்கப்படுவதாக டே தெரிவித்தார்.
ஒற்றை அழைப்பாளர் அடையாளம் என்பது சிங்கப்பூர் காவல்துறை, தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு, சிங்கப்பூர் அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்பின் திறந்தநிலை அரசாங்கத் தயாரிப்புகள் பிரிவு மற்றும் தகவல் தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியாகும்.
2024ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட “gov.sg” குறுஞ்செய்தி அனுப்புநர் அடையாளம் மற்றும் 24 மணி நேர ஸ்கேம்ஷீல்ட் உதவி எண் (1799) ஆகியவற்றின் தொடர்ச்சியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர்க் காவல்துறைத் தரவுகளின்படி, 2026 ஜனவரி முதல் செப்டம்பர் வரை சிங்கப்பூர் அரசாங்க அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து நடத்தப்பட்ட மோசடிகள் தொடர்பாகக் குறைந்தது 3,230 வழக்குகள் பதிவாகியுள்ளன; இவற்றில் குறைந்தது $142.5 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதில் காவல்துறையினரைப் போலவே அதிகளவில் ஆள்மாறாட்டம் செய்யப்பட்டுள்ளது; குறைந்தது 1,310 வழக்குகளில் $53.3 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மோசடியாளர்கள் போலி அழைப்பாளர் அடையாளத்தைப் பயன்படுத்தி அழைப்புகள் அல்லது குறுஞ்செய்திகளை மாறுவேடமிட்டு அனுப்பும் வகையில், இந்த எண் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக டே கூறினார்.
தற்போதுள்ள தொலைத்தொடர்புப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இவை அமைந்துள்ளன; அவற்றில் பின்வருவன அடங்கும்:
● காவல்துறையின் எண்ணைப் போல தோற்றமளிக்கும் +65 6000 0999 போன்ற வெளிநாட்டு அழைப்புகளைத் தடுத்தல்; மற்றும்
● வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் போன்ற குறுஞ்செய்தித் தளங்களில் 6000 0999 என்ற எண்ணையும் “gov.sg” அனுப்புநர் அடையாளத்தையும் அங்கீகாரமின்றிப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள்.
அதிகாரிகள் போர்வையில் மோசடியாளர்கள்
ஆனால், இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கைகளால் அரசாங்க அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து நடத்தப்படும் மோசடி அபாயங்களை முழுமையாக ஒழித்துவிட முடியாது. செயலிகள் மூலமாக அழைப்பது போன்ற வேறு வழிகளிலும் மோசடியாளர்கள் தங்களைப் போலீசார் என்று கூறி ஏமாற்றக்கூடும் என டே எச்சரிக்கிறார்.
நம்பகத்தன்மையை ஏற்படுத்தவும், பாதிக்கப்படுபவர்களுக்கு அழுத்தம் கொடுக்கவும் மோசடியாளர்கள் பல்வேறு அணுகுமுறைகளைக் கையாள்வதாக அவர் கூறுகிறார்:
● பிரபல நிறுவனங்கள் அல்லது நிதி நிறுவனங்களின் ஊழியர்களைப் போல் நடித்து, பாதிக்கப்பட்டவரின் வங்கிக் கணக்கில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனை நடந்துள்ளதாகவோ தனிப்பட்ட தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவோ கூறுவது. பின்னர், பாதிக்கப்பட்டவரின் அழைப்பு அரசாங்க அதிகாரியைப் போல் நடிக்கும் மற்றொரு நபருக்கு “மாற்றப்படும்”. இது அதிகாரிகளிடம் கொண்டு செல்லப்பட்ட ஒருங்கிணைந்த நடவடிக்கை போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.
● அதிகாரபூர்வப் பதவிப் பெயர்கள், உண்மையான அதிகாரிகளின் தனிப்பட்ட விவரங்கள், அல்லது போலி கைது வாரண்டுகள் மற்றும் சீருடைகளைப் பயன்படுத்துவது. அதிகாரத்தில் இருப்பவர்களை நம்பி அவர்களுக்குக் கீழ்ப்படியும் மக்களின் இயல்பை இது சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.
● பணமோசடி போன்ற கடுமையான குற்றங்களைச் செய்ததாகக் குற்றம் சாட்டி கைது செய்வதாக மிரட்டுவது, அல்லது சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்கப் பணம் செலுத்துவது அவசியம் என்று கூறுவது. இதனால் ஏற்படும் பயமும் அவசரமும், பாதிக்கப்பட்டவர்கள் சற்று நிதானித்து, அழைப்பவரிடம் கேள்வி கேட்டு, தகவல்களை உறுதிப்படுத்துவதைக் கடினமாக்குகிறது. அப்போது, உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிந்து அந்த அச்சுறுத்தலிலிருந்து விடுபடுவதிலேயே அவர்கள் கவனம் செலுத்தக்கூடும்.
● விசாரணை ரகசியமானது என்று கூறி, இது குறித்து யாரிடமும் சொல்ல வேண்டாம் எனப் பாதிக்கப்பட்டவர்களுக்கு உத்தரவிடுவது. இது, மோசடியாளரின் கூற்றுகளைக் கேள்விக்குள்ளாக்கக்கூடிய குடும்ப உறுப்பினர்கள், வங்கிகள் அல்லது அதிகாரிகளிடம் அவர்கள் சரிபார்ப்பதைத் தடுக்கிறது.
வங்கிப் பரிமாற்றங்களைத் தவிர, “விசாரணைக்காக” தங்களது பணத்தை மின்னிலக்க நாணயமாக மாற்றுமாறோ, ரொக்கம், தங்கக் கட்டிகள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருள்களை ஒப்படைக்குமாறோ பாதிக்கப்பட்டவர்களிடம் கூறப்படலாம்.
சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அழைப்பைத் துண்டித்துவிட்டு, அதிகாரபூர்வ வழிகள் மூலம் அந்தத் தகவல்களைத் தனிப்பட்ட முறையில் சரிபார்க்குமாறு டே பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறார்.
ஜான்சனும் அதையே செய்தார். அழைப்பைத் துண்டித்தது அவருக்குச் சிந்திக்க அவகாசம் அளித்தது.
“இப்போது, யாராவது எனக்கு அழைத்து தாங்கள் சிங்கப்பூர்க் காவல்துறையிலிருந்து பேசுவதாகக் கூறினாலும், அந்தக் குறிப்பிட்ட ‘காலர் ஐடி’ இல்லையென்றால், நான் உடனே அழைப்பைத் துண்டித்துவிட்டு நிம்மதியாக இருப்பேன்,” என்கிறார் அவர்.
