தானியங்கிக் கப்பல் தொழில்நுட்பத்தைச் சோதிக்கும் திட்டத்துக்கு அழைப்பு

தானியங்கிக் கப்பல் தொழில்நுட்பத்தைச் சோதிக்கும் திட்டத்துக்கு அழைப்பு

2 mins read
2f7cd43a-a9ee-462f-b300-de9b9f54db27
சிங்கப்பூர்க் கடல்துறை வார நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளை உரையாற்றினார். - படம்: சாவ்பாவ்

சிங்கப்பூரின் துறைமுக முனையங்களுக்கு இடையே தானியங்கிக் கப்பல்கள் மூலம் கொள்கலன்கள் கொண்டுசெல்வது எதிர்காலத்தில் சாத்தியமாகலாம்.

அந்தத் தொழில்நுட்பத்தை உருவாக்கி சோதனை செய்வதற்கான திட்டங்களை முன்வைக்கும்படி கடல்துறை, துறைமுக ஆணையமும், பிஎஸ்ஏ செயல்பாட்டு நிறுவனமும் அழைப்புவிடுத்துள்ளன.

துவாஸ், பாசிர் பாஞ்சாங் ஆகிய முனையங்களுக்கு இடையே கொள்கலன்களைக் கொண்டுசெல்லக்கூடிய தானியங்கிக் கப்பல்கள் அன்றாடத் துறைமுகச் செயல்பாடுகளில் முக்கிய அங்கம் வகிப்பதாக ஆணையமும் நிறுவனமும் குறிப்பிட்டன.

தானியங்கித் திறன்கள் மேம்படுவதால் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்படும். தானியக்க முறையில் கப்பல்களையும் அவற்றின் செயல்பாடுகளையும் கண்காணிக்க முடியும் என்று அவை தெரிவித்தன.

தானியக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது கடல்துறையில் அடுத்தகட்ட முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாகவும் தானியங்கிக் கப்பல்களைச் சோதித்துப் பார்க்க சிங்கப்பூர் ஒரு சிறந்த தளம் என்றும் போக்குவரத்து மூத்த துணையமைச்சர் முரளி பிள்ளை கூறினார்.

சிங்கப்பூர்க் கடல்துறை வார நிகழ்ச்சியின் இரண்டாம் நாளில் உரையாற்றிய திரு முரளி, புதிய தொழில்நுட்பங்கள், உற்பத்தியில் நல்ல பலனைப் பெறுவதற்கான உத்தரவாதத்தைத் தருகின்றன என்றார்.

பாசிர் பாஞ்சாங் துறைமுக முனையத்தில் உள்ள தானியங்கிப் பாரந்தூக்கிகள்.
பாசிர் பாஞ்சாங் துறைமுக முனையத்தில் உள்ள தானியங்கிப் பாரந்தூக்கிகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

துவாஸ் துறைமுகத்தின் முதற்கட்டத்தில் தானியக்க வாகனங்களும் பாரந்தூக்கிகளும் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ளன என்றும் உற்பத்தியில் அவை பெரிய அளவில் பலன் தந்துள்ளன என்றும் திரு முரளி சுட்டினார்.

கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதிலும் சிங்கப்பூர் அதிக கவனம் செலுத்துகிறது என்றார் திரு முரளி.

அதை முன்னிட்டு ஐக்கிய நாட்டு நிறுவன வர்த்தக, மேம்பாட்டு அமைப்புடன் சிங்கப்பூரின் கடல்துறை, துறைமுக ஆணையம் ஒப்பந்தம் செய்துள்ளதைத் திரு முரளி சுட்டினார்.

“புவிசார் அரசியல் போட்டியில் பருவநிலை மாற்றம் மறக்கப்பட்டிருக்கலாம். ஆனால், எரிசக்திச் சந்தைகளில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற சூழலில் அதற்கான தேவை இப்போது இன்னும் அதிகரித்துள்ளது,” என்றார் திரு முரளி.

கப்பல்களின் கரிம வெளியேற்றத்தைக் குறைப்பதில் சிங்கப்பூர் அதிக கவனம் செலுத்துகிறது என்றார் அவர்.

பாசிர் பாஞ்சாங் துறைமுக முனையத்தில் கொள்கலன்கள்.
பாசிர் பாஞ்சாங் துறைமுக முனையத்தில் கொள்கலன்கள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
குறிப்புச் சொற்கள்