சிங்கப்பூர் எனும் அடையாளம் போற்றப்படுகிறது, பெருமதிப்புடன் பார்க்கப்படுகிறது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியிருக்கிறார். 60 ஆண்டுகள் நீண்ட பயணத்திற்குப் பிறகு நாடு உயரிய நிலையை எட்டியுள்ளது என்றார் அவர். தொடர்ந்து முன்னேற வேண்டும், நின்றுவிட்டால் அது பின்தங்குவதற்குச் சமம் என்று திரு வோங் கூறினார்.
பெரிதாகக் கனவு காண வேண்டும். புதிய எல்லைகளை எட்ட உறுதியுடன் செயல்பட வேண்டும். தடுக்கி விழுந்தாலும் புதியனவற்றை முயற்சி செய்ய வேண்டும். உயர்வதற்கு இது ஒன்றே வழி என்றார் பிரதமர் வோங்.
சிங்கப்பூரர்கள் அனைவருக்கும் சமூகத்தின் மீதும் சிங்கப்பூர் மீதும் நம்பிக்கை இருக்கிறது.
ஒற்றுமையாக இருந்தால் எந்தவொரு சவாலையும் சமாளிக்க முடியும், எந்தவோர் இலக்கையும் எட்ட முடியும் என்ற நம்பிக்கையும் அவர்களுக்கு உள்ளது.
நம்பிக்கையில் உறுதியுடன் இருந்தால் சிங்கப்பூரர்களால் தொடர்ந்து புதிய சாதனைகளைப் படைக்கமுடியும். சத்தமின்றி அமைதியான முறையில் நம்பிக்கையுடன் புதிய மைல்கற்களை எட்ட முடியும். எஸ்ஜி60க்கும் அப்பால் சிங்கப்பூர்க் கதையின் அடுத்த அத்தியாயத்தை எழுத அனைவருக்கும் பிரதமர் அழைப்பு விடுத்தார்.
‘தனிச்சிறப்புமிக்க, ஒன்றுபட்ட சிங்கப்பூராய் நாம் அனைவரும் இணைந்து அதனை எழுதுவோம்’ என்றுகூறி தேசிய தினப் பேரணி உரையை நிறைவுசெய்தார் பிரதமர் வோங்.

