சிங்கப்பூரின் மருத்துவச் செலவினம் இதுவரை இல்லாத உச்சத்தை இவ்வாண்டு எட்டவிருப்பதால் சுகாதாரப் பராமரிப்புச் சேவைகளின் அளவுக்கு அதிகமான பயன்பாட்டைச் சமாளிக்கப் பல்வேறு தரப்புகள் ஒன்றிணையும்படி சிங்கப்பூர் வாழ்நாள் காப்புறுதிச் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது.
இவ்வாண்டுக்கான மருத்துவச் செலவினம் 16.9 விழுக்காடாக இருக்கும் என்று நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர்.
காப்புறுதி நிறுவனங்கள், சுகாதாரப் பராமரிப்பு நிபுணர்கள், மருத்துவச் சேவை வழங்குவோர், மருத்துவ அதிகாரிகள் ஆகிய பலத் தரப்புகள் ஒன்றிணையும்படி சங்கம் கேட்டுக்கொண்டது.
காப்புறுதி நிறுவனங்களைப் பொருத்தவரை ஒருங்கிணைந்த ஷீல்ட் திட்டம் மருத்துவச் சேவைக்கான கட்டணங்களைக் கட்டுப்படியாகவும் நீண்டகாலம் தாக்குப்பிடிக்கக்கூடியதாகவும் வைத்திருக்க உதவும் என்று சங்கம் குறிப்பிட்டது.
ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து சிங்கப்பூரில் உள்ள ஏழு தனியார் காப்புறுதி நிறுவனங்களும் சுகாதார அமைச்சின் புதிய தரநிலைகளைப் பூர்த்திசெய்யும் புதிய ரைடர் திட்டங்களை அறிமுகம் செய்யவேண்டும்.
புதிய ரைடர் திட்டத்துக்கான சந்தாக்கள் தற்போதுள்ள சந்தாக்களைவிட குறைந்தது 30 விழுக்காடு குறைவாக இருக்கும் என்று நான்கு காப்புறுதி நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பிட்ட ஒரு நிறுவனம் 84 விழுக்காடு வரை குறைவான சந்தாவை வழங்கவிருக்கிறது.
உலக அளவில் மருத்துவச் செலவினங்கள் இந்த ஆண்டு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய பசிபிக் வட்டாரத்தில் 14 விழுக்காடு உயர்வை எதிர்பார்க்கலாம் என்றும் 2026 உலக மருத்துவப் போக்குகள் அமைப்பின் அறிக்கை குறிப்பிடுகிறது.
அமைப்பின் அறிக்கையின்படி சிங்கப்பூர் இந்தோனீசியாவைப் பின்னுக்குத் தள்ளி ஆசியப் பசிபிக் சந்தையில் ஆக அதிகமான மருத்துவச் செலவினத்தைக் கொண்டிருக்கும்.
தொடர்புடைய செய்திகள்
கடந்த ஆண்டுகளில் வெளியான அறிக்கையின்படி சிங்கப்பூரின் மருத்துவச் செலவினம் 10 விழுக்காட்டுக்கும் குறைவாகவே இருந்தது. 2024ஆம் ஆண்டு அது 12.3 விழுக்காடும் கடந்த ஆண்டு அது 15.5 விழுக்காடும் கூடியது.
மூப்படையும் சமூகம், அதிகரிக்கும் நோய்த் தொற்றுகள், விலை அதிகமான புதிய தொழில்நுட்பங்கள், சிகிச்சைகள், மருந்து மாத்திரைகள் ஆகியவற்றால் சிங்கப்பூரின் மருத்துவச் செலவுகள் அதிகமாக இருப்பதாய் அறிக்கை சுட்டியது.
சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் பற்றாக்குறையால் அதிகரிக்கும் சம்பளம் உள்ளிட்ட காரணங்களாலும் மருத்துவச் செலவினம் அதிகரித்துள்ளது.

