நியமன நாடாளுமன்ற உறுப்பினர் முறை பற்றி மறுஆய்வு செய்ய வேண்டும் என முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களை நியமிக்கும் திட்டம் செப்டம்பர் 18ஆம் தேதியுடன் 35வது ஆண்டை எட்டியுள்ள வேளையில், இதற்கு முன்னர் அந்தப் பொறுப்புகளை வகித்த மூவர் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
அந்தத் திட்டம் குறித்த குழு விவாதத்தின்போது அவர்கள் அந்தக் கருத்துகளைக் கூறினர்
அந்த மூவரில் ஒருவரான லாரன்ஸ் லியென், நியமன நாடாளுமன்ற உறுப்பினராக ஒருவர் தேர்ந்து எடுக்கப்படுமுன்னர், இடைவேளை விடப்பட வேண்டும் என்று யோசனை தெரிவித்தார்.
அரசியல் கட்சி சார்பாக அவர் நிறுத்தப்படுகிறாரா அல்லது சுயேச்சையாகக் களமிறங்குகிறாரா என்பதைக் கருத்தில்கொள்ளாமல் எல்லாருக்கும் பொருந்தும் வகையில் அந்த ஏற்பாடு இருக்கலாம் என்றார் அவர்.
நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திட்டத்தில் இடம்பெறுவோர் ஒட்டுமொத்த சிங்கப்பூரைப் பிரதிநிதிக்கிறார் என்றும் பாரபட்சமற்ற தன்மையை அவரிடமிருந்து பொதுமக்கள் எதிர்பார்ப்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
நியமன நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்து எடுக்கப்படுபவர் ஒருசார்பாக இருப்பாரேயானால் அது நம்பகத்தன்மையை அழித்துவிடும் என்பதும் அவரது கருத்தாக இருந்தது.
மற்றொரு முன்னாள் உறுப்பினரான குயிக் ஷியாவ்-யின் கூறுகையில், நியமன நாடாளுமன்ற உறுப்பினர் தாம் தேர்ந்து எடுக்கப்பட்டதைப் பற்றிக் கவலைப்படாமல் நாடாளுமன்றத்தில் பிரச்சினைகளை எழுப்பக்கூடியவராக இருக்க வேண்டும் என்றார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், அத்தகைய உறுப்பினர் சாதாரண பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அம்சங்கள் பற்றி பேசுவதன் மூலம் மக்களின் கவனத்தை ஈர்க்கக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இன்னொரு முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினரான வழக்கறிஞர் சந்திரமோகன் கே நாயர், திட்டத்தின் நடுநிலையான போக்கு தொடர்ந்து நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2001ஆம் ஆண்டு முதல் 2004ஆம் ஆண்டுவரை தாம் நியமன நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், தங்களுடன் இணைந்துகொள்ளுமாறு பாட்டாளிக் கட்சியிடம் இருந்தும் சிங்கப்பூர் ஜனநாயகக் கூட்டணியிடம் இருந்தும் அழைப்பு வந்ததாகவும் தாம் அதனை ஏற்கவில்லை என்றும் திரு நாயர் கூறினார்.
நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திட்டம் குறித்து 500 சிங்கபூரர்களிடம் நாடளாவிய ஆய்வு நடத்தப்பட்டது.
அவர்களில் 71 விழுக்காட்டினர் நியமன நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாற்றுக் குரல்களை நாடாளுமன்றத்தில் ஒலிப்பதாகக் கூறியபோதிலும், அந்தத் திட்டம் பொருத்தமானது என்ற கருத்தை மூன்றில் ஒரு பங்கினரே தெரிவித்திருந்தனர். ஆய்வில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கும் யோசனைகளுக்கும் குழு விவாதத்தின்போது நிபுணர்கள் பதில் கூறினர்.