கம்போடியாவில் சிங்கப்பூரர்கள் வழிநடத்தியதாகக் கூறப்படும் குற்றக் கும்பலுடன் தொடர்பிருப்பதாக நம்பப்படும் நான்காவது நபர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
சந்தேக நபரான ஜேயன் லீ ஜியென் ஹாவ், அரசாங்க அதிகாரிகளைப் போல் நடித்து மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. 32 வயது லீயை தாய்லாந்துக் காவல்துறை, அந்நாட்டுத் தநைகர் பேங்காக்கில் கைது செய்தது. பிறகு சிங்கப்பூர் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட அவர், திட்டமிட்டு நடத்தப்படும் குற்றங்களுக்கு எதிரான சட்டத்தின்கீழ் (Organised Crime Act) குற்றம் புரிந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
சிங்கப்பூரரான லீ, சிங்கப்பூரர்களைக் குறிவைத்த குற்றக் கும்பலின் உறுப்பினராக இருந்ததாக நம்பப்படுகிறது என்று சிங்கப்பூர் காவல்துறை முன்னதாக வேறு அறிக்கையில் குறப்பிட்டிருந்தது.
வெள்ளிக்கிழமை (டிசம்பர் 5) குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட லீ, கடந்த செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதிவாக்கில் கம்போடியாவில் மோசடி நிலையம் ஒன்றில் தொலைபேசியில் பிறரை அழைக்கும் ‘பொறுப்பில்’ இருந்து ஏமாற்றுச் செயலுக்குத் துணைபோனதாகக் கூறப்படுகிறது. அவரின் வழக்கு இம்மாதம் 12ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆராயப்படும்.
நோம்பென்னில் இயங்கிய குற்றக் கும்பல், சிங்கப்பூரில் குறைந்தது 438 மோசடிச் செயல்களில் ஈடுபட்டதாக நம்பப்படுகிறது. அந்த மோசடிச் செயல்களில் குறைந்தது 41 மில்லியன் வெள்ளி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
குற்றக் கும்பலின் மூளையாக விளங்கியவர்கள் இங் வெய் லியாங், இங் வெய் காங் ஆகிய சகோதரர்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர்களின் ஒன்றுவிட்ட சகோதரர் லெஸ்டர் இங் ஜிங் ஹாய், இங் வெய் லியாங்கின் காதலி சிறிஸ்டி நியோ வெய் என் ஆகியோரும் கும்பலில் இடம்பெற்றிருந்ததாகக் கூறப்படுகிறது.
இங் வெய் காங், நியோ, லெஸ்டர் இங் ஆகிய மூவர் மீதும் திட்டமிட்டு நடத்தப்படும் குற்றங்களுக்கு எதிரான சட்டத்தின்கீழ் கடந்த செப்டம்பர் மாதம் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. கடந்த அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி அவர்களுக்குப் பிணை மறுக்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் அக்டோபர் மாதம் 34 சந்தேக நபர்கள், தேடப்பட்டு வருவோர் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் மூவர் பிடிபட்டு அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

