கம்போடிய மோசடிக் கும்பலுக்காக மோசடி அழைப்பாளர்களாகச் செயல்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இரண்டு சிங்கப்பூர் ஆடவர்களில் ஒருவருக்குப் பிணை வழங்கக்கூடாது என்று அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார்.
27 வயது வேன் சோ யூ சென் மீது பிணையில் விடமுடியாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவரைப் பிணையில் விடுவித்தால் அவர் சிங்கப்பூரிலிருந்து தப்பிச் செல்லும் சாத்தியம் இருப்பதாகவும் காவல்துறை சார்பாக வாதிடும் வழக்கறிஞர் கூறினார்.
கம்போடிய மோசடிக் கும்பலின் தலைவர்களுடன் சோவுக்கு நெருங்கிய தொடர்பு இருந்ததாக அவர் தெரிவித்தார்.
மோசடிக் கும்பலின் தலைவர்கள் இன்னும் பிடிபடவில்லை என்றும் சோவை பிணையில் விட்டால் அவர்கள் அவருடன் தொடர்புகொண்டு செயல்படக்கூடும் என்றும் அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
சோவுடன், 32 வயது பிரயன் சீ எங் ஃபா மீதும் நவம்பர் மாதம் 17ஆம் தேதியன்று மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
சம்பந்தப்பட்ட மோசடிக் கும்பலிடம் சிக்கியோர் குறைந்தது $41 மில்லியன் இழந்தனர்.
இதுதொடர்பாக 438 வழக்குகள் பதிவாகி உள்ளன.
மோசடிக் கும்பல் செயல்பட்டு வந்த இடத்திலிருந்து இரு ஆடவர்களும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதி வாக்கில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
மோசடிக் கும்பல் சிங்கப்பூரில் உள்ளவர்களைக் குறிவைத்துச் செயல்பட்டது.
அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படும் 34 பேர், சிங்கப்பூர் காவல்துறையால் தேடப்பட்டு வந்தவர்கள்.
அவர்களில் இந்த இரண்டு சிங்கப்பூரர்களும் அடங்குவர்.
செப்டம்பர் மாதம் 9ஆம் தேதியன்று, கம்போடியாவில் மோசடிக் கும்பல் செயல்பட்டு வந்த இடத்தில் சிங்கப்பூர் காவல்துறையும் கம்போடிய தேசியக் காவல்துறையும் அதிரடிச் சோதனை நடத்தின.
ஆனால், இந்தச் சோதனை நடத்தப்படுவதற்கு முன்பு, சோ அங்கிருந்து தப்பினார்.
இருப்பினும், அவர் அதிகாரிகளிடம் பிறகு பிடிபட்டார்.
கைது செய்யப்பட்ட சோ, சிங்கப்பூருக்கு நாடு கடத்தப்பட்டார்.

