சிங்கப்பூருக்கு முதல் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளும் கம்போடியாவின் புதிய பிரதமர்

சிங்கப்பூருக்கு முதல் அதிகாரத்துவப் பயணம் மேற்கொள்ளும் கம்போடியாவின் புதிய பிரதமர்

1 mins read
a15fba1b-9d97-462f-9b2f-73227ecc1a0c
ஆஸ்திரேலியாவில் மார்ச் 5ஆம் தேதி நடைபெற்ற ஆசியான்-ஆஸ்திரேலியா சிறப்பு உச்சநிலை மாநாட்டிற்கிடையே கம்போடியாவின் புதிய பிரதமர் ஹுன் மானெட் (இடம்) சிங்கப்பூரின் அப்போதைய பிரதமர் லீ சியன் லூங்கைச் சந்தித்துப் பேசினார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

கம்போடியாவின் புதிய பிரதமர் ஹுன் மானெட் இரண்டு நாள் அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு ஜூன் 18ஆம் தேதி சிங்கப்பூருக்கு வருகையளிக்கவிருக்கிறார்.

வெளியுறவு அமைச்சு ஜூன் 17ஆம் தேதி இத்தகவலை வெளியிட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதம் கம்போடியப் பிரதமராகப் பதவியேற்ற பிறகு அவர் சிங்கப்பூருக்கு வருவது இதுவே முதல்முறை.

சிங்கப்பூரும் கம்போடியாவும் அரசதந்திர உறவுகளைத் தொடங்கி அடுத்த ஆண்டுடன் (2025) 60 ஆண்டுகள் நிறைவடையவிருக்கின்றன.

கம்போடியப் பிரதமருக்கு இஸ்தானாவில் அதிகாரபூர்வ வரவேற்பு அளிக்கப்படும். அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை அவர் சந்தித்துப் பேசுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

பிரதமர் லாரன்ஸ் வோங்கையும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங்கையும் திரு ஹுன் சந்தித்துப் பேசுவார்.

மாலையில் பிரதமர் வோங் அவருக்கு அதிகாரபூர்வ விருந்தளிப்பார்.

சிங்கப்பூர் பயணத்தின்போது, கம்போடிய வர்த்தக சபையும் சிங்கப்பூர் வர்த்தகக் கூட்டமைப்பும் ஏற்பாடு செய்யும் கம்போடிய-சிங்கப்பூர் வர்த்தகக் கருத்தரங்கில் பிரதமர் ஹுன் கலந்துகொள்வார்.

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், கெப்பல் இன்ஃபிராஸ்ட்ரக்சர்@சாங்கி ஆகியவற்றை அவர் பார்வையிடுவார்.

திரு ஹுன்னுடன் கம்போடியத் துணைப் பிரதமரும் வெளியுறவு, அனைத்துலக ஒத்துழைப்புக்கான அமைச்சருமான சோக் செண்டா சோவியா, அமைச்சர்நிலைப் பேராளர்கள், அரசாங்க மூத்த அதிகாரிகள், கம்போடிய வர்த்தக சபையின் பிரதிநிதிகள் ஆகியோரும் சிங்கப்பூருக்கு வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்
கம்போடியாபிரதமர்சிங்கப்பூர்பயணம்