கேமரா அடிப்படையிலான ‘இஆர்பி’ சோதனை 97.2% துல்லியம்: ஓஜிபி

கேமரா அடிப்படையிலான ‘இஆர்பி’ சோதனை 97.2% துல்லியம்: ஓஜிபி

2 mins read
be45c437-becc-4de2-a60d-1c04ec5b7a96
பிராஸ் பாசா ரோட்டில் சோதனை அடிப்படையில் இயங்கும் இஆர்பி கட்டணங்களுக்கான கண்காணிப்புக் கேமரா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

சிங்கப்பூர் சாலைகளில் செல்லும் வாகனங்களின் பதிவெண் பலகைகளைச் சரியாக அடையாளம் காணும் நோக்கத்துடன் கண்காணிப்பு கேமராக்களை அடிப்படையாகக் கொண்டு சோதனை செய்யப்பட்டது.

‘இஆர்பி எக்ஸ்’ திட்டத்தின்கீழ், வாகனங்களுக்கான சாலைக் கட்டணங்களை வசூலிப்பதற்கென 'ஓப்பன் கவர்ன்மென்ட் புராடக்ட்ஸ்’ (OGP) அமைப்பு கேமராக்களை இரண்டு ஆண்டுகாலம் சோதித்தது.

அச்சோதனையில் 10க்கு ஒன்பது முறை அவை வாகனப் பதிவெண்களைத் துல்லியமாக அடையாளம் கண்டன.

மழையிலும் இரவு நேரங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. ஏறத்தாழ 403 வாகன ஓட்டுநர்களும், 63 சாலை ஓர கேமராக்களும் சோதிக்கப்பட்டன.

சோதனையில் வாகனங்கள் கேமராக்களைக் கடந்து சென்றபோது, ஓட்டுநர்களின் திறன்பேசிகளில் சாலைப் பயன்பாட்டுக்கான கட்டணங்கள் விதிக்கப்பட்டன.

சூரிய ஒளிநிறைந்த நாள்களில் 99.2 விழுக்காடும், மழை பொழியும் இரவுகளில் 91 விழுக்காடும் கேமராக்கள் துல்லியமாக இயங்கியது சோதனையில் தெரியவந்தது.

எனவே வானிலை, காலை அல்லது மாலை வேளை ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு, கேமராவை அடிப்படையாகக் கொண்ட சோதனைத் திட்டத்தின் சராசரி துல்லியத்தன்மை 97.2 விழுக்காடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் விவரங்களை ஓஜிபி ஜூலை 27ஆம் தேதி வெளியிட்டது. அந்த அமைப்பு அரசாங்கத் தொழில்நுட்ப முகவையின்கீழ் (GovTech) இயங்கும் சுயேச்சையான பிரிவாகும்.

வாகன நுழைவு வளைய அமைப்புகளைக் (கேன்ட்ரி) கொண்டு தற்போது செயல்பாட்டில் இருக்கும் செயற்கைக்கோள் சார்ந்த சாலைக் கட்டண வசூல் கட்டமைப்புக்குப் பதிலாக வாகன எண்களை கேமராக்களைக் கொண்டு அடையாளம் காணும் தொழில்நுட்பத்தை ஓஜிபி அமைப்பு ஆய்வுக்கு உட்படுத்தியது.

சாலைப் பயன்பாட்டிற்கான கட்டண முறைக்கு ஒரு சாத்தியமான மாற்று வழியைச் சோதிப்பதே அதன் எண்ணமே தவிர, தற்போதுள்ள முறையை முழுவதும் மாற்றுவதன்று என்று ஓஜிபி அதன் ஆய்வு அறிக்கையில் வலியுறுத்தியது.

குறிப்புச் சொற்கள்
நிலப் போக்குவரத்து ஆணையம்சாலைக் கட்டணம்இஆர்பிவாகன நுழைவுஉள்கட்டமைப்பு