தேடுதல் நடவடிக்கையில் கேமரா பொருத்தப்பட்ட மோப்ப நாய்

தேடுதல் நடவடிக்கையில் கேமரா பொருத்தப்பட்ட மோப்ப நாய்

2 mins read
97c2787f-5ee3-4fb8-9a93-fa38b472479e
உள்துறைக்குழு திறன் உத்தி மைய வளாகத்தில் கேமரா பொருத்தப்பட்ட மோப்ப நாயை பாவனைப் பயிற்சியில் ஈடுபடுத்திச் சோதித்த அதிகாரிகள். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தேடுதல் நடவடிக்கையை மேம்படுத்த சிங்கப்பூர்க் காவல்துறை புதிய வகைத் தொழில்நுட்பத்தைச் சோதித்துப் பார்த்துள்ளது.

அபாயமுள்ளதாகக் கருதப்படும் இடங்களை மோப்ப நாய்கள் மீது பொருத்தப்பட்டிருக்கும் கேமரா வழியாகக் கண்காணிப்பதே அந்தத் தொழில்நுட்பம்.

அதனை சிங்கப்பூர் காவல்துறையின் ‘கே-9’ மோப்ப நாய்ப் பிரிவு அண்மையில் சோதித்தது. காவல்துறையின் சிறப்புச் செயற்பாடுகளுக்கான தளபத்திய நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் உள்துறைக்குழு திறன் உத்தி மைய வளாகத்தில் அதற்கான பாவனைப் பயிற்சியை நடத்தினர்.

மோப்ப நாய் எதனைக் காண்கிறதோ அதனை அப்படியே ஒளி, ஒலி வடிவில் கண்காணிப்பு அதிகாரிகள் தொலைவிலிருந்து அறிந்துகொள்ள முடியும்.

கேமரா எடை குறைந்ததாக இருக்கும். அது, மோப்ப நாயின் நடமாட்டத்திற்கு எவ்விதத் தடையும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்ட, சரிசெய்யக்கூடிய கச்சை ஒன்றின் மீது பொருத்தப்படும்.

குறிப்பிட்ட ஒரு இடத்திற்குள் தேடுதல் வேட்டைக்காக அதிகாரிகள் நுழையுமுன்பே கேமரா பொருத்தப்பட்ட மோப்ப நாய் அங்கு சென்றுவிடும்.

அதன்மூலம் அந்த இடத்தில் சாத்தியமான அச்சுறுத்தல் ஏதும் இருக்கிறதா என்பதை முன்கூட்டியே நேரலையாகக் காணமுடியும் என்று ‘கே-9’ மோப்ப நாய்ப் பிரிவின் துணைத் தலைமை அதிகாரி ஜெர்லின் டான் தெரிவித்தார்.

கேமராவுடன் கூடிய மோப்ப நாய்களைத் தேடுதல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் முறை ஏற்கெனவே வடஅமெரிக்காவிலும் பிரிட்டனிலும் உள்ளது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

இது, அதிகாரிகளுக்கு ஈடு இணையற்றப் பாதுகாப்பை வழங்குவதாக கனடாவின் எட்மோண்டன் காவல்துறைச் சேவைப் பிரிவு தெரிவித்துள்ளது.

கேமரா பொருத்தப்பட்ட மோப்ப நாய்களை அந்தக் காவல்துறைப் பிரிவு 2013ஆம் ஆண்டு முதல் பயன்படுத்தி வருகிறது.

மோப்ப நாய் மனிதர்களைக் காட்டிலும் சிறிய உருவமாக இருப்பதாலும் சுறுசுறுப்பாக இயங்குவதாலும் தேடுதல் நடவடிக்கையின்போது அதிகாரிகள் குழு செல்லும் முன்பே அது அனுப்பப்படுவது வழக்கம் என்று சிங்கப்பூர் காவல்துறை கூறியது.

குறிப்பாக, குறுகிய இடங்களில் அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக்கூடிய இடையூறுகள் அல்லது மறைந்திருக்கும் ஆபத்துகள் எவையேனும் இருந்தால் அவற்றை மோப்ப நாய் கேமராக்கள் வெளிப்படுத்தக்கூடும் என்று காவல்துறையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.

உடல்வெப்ப நிலையைத் துல்லியமாக அளவிடக்கூடியதாக கேமரா கருவிகள் இருப்பதால், அதன் மூலம் ஒளிந்திருப்போரையும் கண்டுபிடித்துவிட முடியும் என்று அவர் விளக்கினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்