ஈப்போ: மலேசியாவின் ஜாலான் சிம்பாங் புலாய் - கேமரன் ஹைலண்ட்ஸ் சாலையில் விரைவுப் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்தனர்.
அவ்விபத்து சனிக்கிழமை (மார்ச் 15) காலை 5.30 மணியளவில் நேர்ந்தது.
அதில், பேருந்தின் ஓட்டுநருக்குக் கால் உடைந்தது என்றும் இரு பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது என்றும் பேராக் தீயணைப்பு, மீட்புத் துறையின் உதவி இயக்குநர் சபரோட்ஸி நோர் அகமது தெரிவித்தார்.
“23 சிங்கப்பூர்ப் பயணிகளை ஏற்றிச் சென்ற அப்பேருந்து, சாலையில் வழுக்கிச் சென்று, சாலையோரமாகக் கவிழ்ந்தது. அப்பேருந்தின் ஓட்டுநரைப் பொதுமக்கள் மீட்டனர். காயமடைந்த மூவரும் சுகாதார அமைச்சுப் பணியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்,” என்று திரு அகமது விளக்கினார்.
கவிழ்ந்து கிடந்த பேருந்தையும் அதன் பயணிகள் சாலையோரமாக நின்றிருந்ததையும் இணையத்தில் பகிரப்பட்டப் படங்கள் காட்டின.

