செம்பவாங் வட்டாரத்தில் இருக்கும் கேன்பரா ரெசிடன்சஸ் கூட்டுரிமை வீடுகளின் கட்டடக் குறைபாடுகள் தொடர்பில், அதன் நிர்வாகக் கழகம் முதன்மைக் குத்தகைதாரரான எம்சிசி இன்ஜினியரிங் நிறுவனத்தின்மீது ஒப்பந்த மீறல் வழக்குத் தொடுத்துள்ளது.
2020ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுமுகத் தீர்வு உடன்பாட்டை முதன்மைக் குத்தகைதாரர் மீறிவிட்டதாக அக்கழகம் குற்றம் சாட்டியுள்ளது.
320 வீடுகளைக் கொண்ட அக்கூட்டுரிமை வீடமைப்புத் திட்டம் 2013ஆம் ஆண்டில் தற்காலிகக் குடியிருப்பு அனுமதியைப் பெற்றது.
எனினும், குடியமர்ந்த சில காலத்திலேயே மேல்மாட (பால்கனி) கண்ணாடிச் சட்டங்கள் தானாக உடைந்து நொறுங்குதல், அடித்தளத்தில் நீர் தேங்குதல், உடற்பயிற்சிக் கூடங்களில் நீர்க் கசிவு, வண்ணச்சாயம் உரிந்து கொட்டுதல், தரைத்தளப் பழுதுகள் போன்ற பல்வேறு கட்டடக் குறைபாடுகளைக் குடியிருப்பாளர்கள் எதிர்கொண்டனர்.
2020ஆம் ஆண்டு கையெழுத்தான உடன்பாட்டின்படி, 12 மாதங்களுக்குள் அனைத்துப் பழுதுபார்ப்பு, சீரமைப்புப் பணிகளையும் ஒப்பந்ததாரர் முடித்திருக்க வேண்டும்.
ஆனால், ஒப்புக்கொள்ளப்பட்ட காலக்கெடுவுக்குள் உரிய தரத்தில் பழுதுபார்ப்புப் பணிகள் முழுமையாகச் செய்து முடிக்கப்படவில்லை என அக்கூட்டுரிமை வீடுகளின் நிர்வாகக் கழகம் வாதிடுகிறது.
மேலும், மாற்று முறைகள் முறையாகப் பின்பற்றப்படாததால் மேல்மாடக் கண்ணாடிகள் மீண்டும் உடைந்ததாகவும் தமது மனுவில் அது தெரிவித்துள்ளது.
நிர்வாகக் கழகத்தின் குற்றச்சாட்டுகளை எம்சிசி இன்ஜினியரிங் நிறுவனம் மறுத்துள்ளது.
பெரும்பாலான பழுதுபார்ப்புப் பணிகள் முடிந்துவிட்டது என்றும் சில இடங்களில் நிர்வாகக் கழகம் அனுமதி வழங்காததே தாமதத்திற்குக் காரணம் என்றும் அது தெரிவித்துள்ளது.
மேலும், கொவிட்-19 பெருந்தொற்றுத் காலத்தில் ஏற்பட்ட வேலை முடக்கநிலை, இயற்கைத் தேய்மானங்கள் ஆகியவை காரணமாகவே புதிய சிக்கல்கள் உருவெடுத்துள்ளதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
அவ்வழக்கின் விசாரணை அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்கவுள்ளது.


