தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!
செங்காங் கிரீன் தொடக்கப்பள்ளியில் பகடிவதைக்கு எதிராக நடவடிக்கை

பகடிவதை செய்ததற்காகத் தொடக்கப்பள்ளி மாணவருக்குப் பிரம்படி: கல்வி அமைச்சு

2 mins read
c423d0c2-0dae-4852-a32c-7320317459b8
சக மாணவியின் தாய்க்குத் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்த மூன்று மாணவர்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டனர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செங்காங் கிரீன் தொடக்கப்பள்ளி மாணவர் ஒருவருக்குச் சக மாணவியைப் பகடிவதை செய்ததற்காகப் பிரம்படி கொடுக்கப்பட்டதாய்க் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. சக மாணவியின் தாய்க்குத் தொலைபேசியில் கொலை மிரட்டல் விடுத்ததால் தற்காலிகமாக நீக்கப்பட்ட மூன்று மாணவர்களில் அவரும் ஒருவர்.

பள்ளி உரிய நேரத்தில் நடவடிக்கை எடுத்ததாக அமைச்சு சொன்னது.

பகடிவதைக்கு ஆளான மாணவி, பள்ளிக்குப் போகவில்லை.

பள்ளியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் பள்ளிக்குத் திரும்பவிருக்கிறார்.

வேறொரு பள்ளிக்கு மாணவியை மாற்றும்படி அவரின் பெற்றோரும் இப்போது கோரவில்லை என்று அமைச்சு கூறியது.

மாணவியின் தாயார் நி யின், பள்ளியில் தமது மகள் கடந்த சில மாதங்களாகத் தொடர்ந்து பகடிவதைக்கு ஆளானதாய்க் கூறியதாகவும் அதனால் பள்ளிக்குப் போவதை நிறுத்திக்கொள்ள விரும்பியதாகவும் ஆகஸ்ட் 14ஆம் தேதி ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டிருந்தார்.

அதில் மாணவியின் தாயாருக்கும் அவர்களின் குடும்பத்தாருக்கும் விடுக்கப்பட்ட மிரட்டல்களின் ஒலிப்பதிவும் இடம்பெற்றிருந்தது.

அதன் பிறகு திருவாட்டி நி யின் பள்ளியில் புகார் செய்திருந்தார்.

குற்றச்சாட்டுகளின் கடுமை கருதி, என்ன நடந்தது என்பதை வெளியிடப்போவதாகக் கல்வி அமைச்சு ஆகஸ்ட் 20ஆம் தேதி ஃபேஸ்புக்கில் தெரிவித்தது.

ஒவ்வொரு முறையும் ஏதாவது சம்பவம் குறித்துத் தெரிவிக்கப்பட்டபோதும் பள்ளி முறையாக அதனைக் கையாண்டதாகவும் உறுதியான ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாகவும் அமைச்சு குறிப்பிட்டது. அதே நேரம் நட்புணர்வை மீண்டும் நிலைநிறுத்தி, கற்றுக்கொண்டு முன்னேறப் பிள்ளைகளுக்குப் பள்ளி உதவியதாகவும் கூறப்பட்டது.

சில வேளைகளில் மாணவியும் காயப்படுத்துகின்ற வகையில் இனரீதியாகத் தவறான முறையில் பேசியதாக அமைச்சு குறிப்பிட்டது. அத்தகைய சம்பவங்களைப் பள்ளி நியாயமான முறையில் கையாண்டதையும் அமைச்சு சுட்டியது.

கொலை மிரட்டலுக்குப் பிறகு, திருவாட்டி நி யின் காவல்துறையிடம் புகார் கொடுத்தார். பள்ளியிடமும் அமைச்சிடமும் வட்டாரத்தின் நாடாளுமன்ற உறுப்பினரிடமும் பின்பு அவர் அதனைத் தெரிவித்தார். இந்த விவகாரத்தைக் கவனிக்கும்படியும் மாணவியின் தாயார் கேட்டுக்கொண்டிருந்தார்.

புகார் கொடுக்கப்பட்டதை உறுதிசெய்த காவல்துறை, விவகாரம் குறித்து விசாரிப்பதாகத் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்