அதிகமான தற்காப்புச் செலவினங்களால் மட்டும் திறன்களை வளர்க்க முடியாது: அமைச்சர் சான்

அதிகமான தற்காப்புச் செலவினங்களால் மட்டும் திறன்களை வளர்க்க முடியாது: அமைச்சர் சான்

2 mins read
223ce319-cac9-49f1-b89b-7bf0f86cd272
சிங்கப்பூரில் நடைபெற்ற 23வது ‌‌ஷங்ரிலா கலந்துரையாடலின் முடிவில் செய்தியாளர்களிடம் திரு சான் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

தற்காப்புத் துறையில் ஒரு நாடு எவ்வளவு செலவிடுகிறது என்பதைவிட அந்த நிதியை எப்படிச் செலவு செய்கிறது என்பதுதான் மிகவும் முக்கியம் என்று தற்காப்பு அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற 23வது ‌‌ஷங்ரிலா கலந்துரையாடலின் முடிவில் செய்தியாளர்களிடம் திரு சான் பேசினார்.

நம்பகமான, பொருத்தமான பங்காளி நாடுகளாக இருப்பதற்கான பொறுப்பு, நாடுகளின் கையில்தான் உள்ளது. ஆனால், தற்காப்புச் செலவினங்களை அதிகரித்து கூடுதல் வசதிகளை உருவாக்கும் நாடுகள், மற்ற நாடுகளின் நம்பிக்கையை வலுப்படுத்த நேரம் செலவிடுவதுடன் முயற்சியும் செய்யவேண்டும் என்றார் திரு சான்.

“எவ்வளவு வலிமையாக இருக்கிறோமோ அந்த அளவு மற்றவர்கள் நம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும். ஏனென்றால், தற்காப்புத் துறையைப் பொறுத்தவரை, மக்கள் நமது வளங்களை மட்டும் பார்ப்பதில்லை, நமது உள்நோக்கங்களையும் பார்க்கின்றனர்,” என்றார் திரு சான்.

தற்காப்புத் துறைக்குச் செலவிடும் நிதியும் அவற்றைச் செலவு செய்யும் விதமும் நாடுகளிடையே மாறுபட்டவையாக உள்ளன என்று திரு சான் குறிப்பிட்டார்.

“சில நாடுகள் அதிகம் செலவிட்டாலும் அதற்கேற்ற திறன் வளத்தைப் பெறுவதில்லை. மாறாக, நிலையாகச் செலவு செய்து உண்மையான திறன்களை உருவாக்கிக்கொள்ளவேண்டும். குறிப்பாக, மனிதவளத்தில்,” என்று திரு சான் விளக்கம் அளித்தார்.

ஒரு விமானி, ஒரு மாலுமி போன்றோருக்குப் பயிற்சி அளிக்க பல ஆண்டுகள் தேவைப்படலாம். அறிவியல் சமூகத்தையும் தொழில்நுட்பத் திறன்களையும் உருவாக்க அதைவிட இன்னும் கூடுதல் காலம் தேவைப்படலாம் என்று திரு சான் கூறினார்.

தற்காப்புச் செலவினங்கள் குறித்த கலந்துரையாடல் இரண்டாவது ஆண்டாக நீடிக்கிறது.

கடந்த சில ஆண்டுகளில் சிங்கப்பூரின் தற்காப்புச் செலவினங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட மூன்று விழுக்காடாக இருந்தது என்ற திரு சான், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஆறு விழுக்காடுவரை செலவிட சிங்கப்பூர் ஆயுதப் படைக்குப் பொதுமக்களின் ஆதரவும் அரசியல் ஆதரவும் இருந்தன என்றார்.

ஒருசில நாடுகள், தற்காப்புக்கான நிதியைச் சரியாகப் பயன்படுத்தாமல் இருப்பதால் செலவினங்களுக்கு ஏற்ற திறன்களைப் பெற முடியாமல் இருக்கின்றன என்று திரு சான் மேலும் கூறினார்.

கலந்துரையாடலின்போது நடைபெற்ற கூட்டங்களில் வெவ்வேறு நாடுகளின் தற்காப்பு அமைச்சர்கள் முன்வைத்த சவால்களில் இதுவும் ஒன்று.

பிரச்சினை தொடங்கியவுடன் தற்காப்புத் துறையில் செலவிடுவதற்குப் பதிலாக நிலையான முறையில் தொடர்ந்து செலவிடுவது குறித்து பொதுமக்களிடம் விளக்குவது குறித்தும் தலைவர்கள் கலந்துரையாடினர்.

‌‌ஷங்ரிலா கலந்துரையாடலில் அறிமுகம் செய்யப்பட்ட கடலடி உள்கட்டமைப்புக்கான தற்காப்புப் பரிமாற்ற வழிகாட்டிக் கொள்கைகள் பற்றியும் திரு சான் பேசினார்.

சிங்கப்பூரும் 16 நாடுகளும் இணைந்து அந்த வழிகாட்டிக் கொள்கைகளை அறிமுகம் செய்தன.

எரிசக்திப் பரிமாற்றம், இணையப் பரிமாற்றம் ஆகியவற்றின் பாதுகாப்பை வலுப்படுத்த அந்தப் புதிய உடன்பாடு மிகவும் முக்கியம் என்று திரு சான் வலியுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்