இந்தியாவில் நடைபெற்ற பணிகள் தொடர்பில் கேப்பிட்டாலேண்ட் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் பலர் லஞ்சம் பெற்றதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, லீ கிம் தா (எல்கேடி LKT) என்னும் கட்டுமான நிறுவனம் தனது முன்னாள் இயக்குநர் ஒருவர் மீது வழக்குத் தொடுத்துள்ளது.
இந்தியாவில் கேப்பிட்டாலேண்ட் மேற்கொண்டு வரும் திட்டம் தொடர்பில் கடமை தவறியதற்காகவும் இதர பரிவர்த்தனைகளுக்காகவும் அந்த வழக்குத் தொடுக்கப்பட்டு உள்ளதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.
அந்த ஆவணங்களை ‘பிஸ்னெஸ் டைம்ஸ்’ நாளிதழ் கண்டது.
இருப்பினும், வழக்கு தொடர்பான விவரங்களைத் தெரிவிக்க கேப்பிட்டாலேண்ட் மறுத்துவிட்டது.
கடந்த 2023ஆம் ஆண்டு இவ்விவகாரம் வெளியே தெரிய வந்ததும் அது தொடர்பாக விசாரணை நடத்தியதாகவும் காவல்துறையை நாடியதாகவும் அந்நிறுவனம் கூறியது.
தற்போது அந்த விவகாரம் விசாரணையில் உள்ளதால் மேற்கொண்டு கருத்து எதுவும் தெரிவிக்க இயலாது என்றது கேப்பிட்டாலேண்ட்.
உயர் நெறிசார்ந்த தரநிலைகளுடனும் நேர்மையுடனும் தொழிலை நடத்த தான் முழு கடப்பாடு கொண்டிருப்பதாகவும் நெறி தவறும் நடத்தைகளை சகித்துக்கொள்வதில்லை என்றும் அது குறிப்பிட்டு உள்ளது.
வழக்கைச் சந்திக்கும் முன்னாள் எல்கேடி ஊழியரான எட்மண்ட் சீ தியங் ஆன், 2005ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை அந்நிறுவனத்தின் இயக்குநராக வேலை செய்தார்.
தொடர்புடைய செய்திகள்
அந்த காலகட்டத்தில் நிறுவனத்தின் முதலீடுகளையும் அவர் கவனித்து வந்தார்.
இந்தியாவில் உள்ள கட்டுமானத் திட்டங்களுக்குத் தேவைப்படும் கட்டுமானச் சேவைகளை வழங்கும் எல் ஆண்ட் டபிள்யூ நிறுவனத்தின் பொறுப்பிலும் அவர் இருந்தார். அச்சேவைகளைப் பெறும் நிறுவனங்களில் கேப்பிட்டாலேண்ட்டும் ஒன்று.
திரு சீ தனது துணை நிறுவனமான எல் அண்ட் டபிள்யூவை சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளில் ஈடுபடச் செய்ததாக எல்கேடி நிறுவனம் கூறியுள்ளது.
அவர் மீதான குற்றச்சாட்டுகள் பெரும்பாலானவற்றில் எல் அண்ட் டபிள்யூ நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் ஆசைத்தம்பி மாணிக்கம் சம்பந்தப்பட்டு இருப்பதாகவும் அரசாங்க அதிகாரிகளுக்கும் வாடிக்கையாளர்களின் ஊழியர்களுக்கும் அவர் லஞ்சம் கொடுத்ததாகவும் எல்கேடி தெரிவித்துள்ளது.