கோத்தா திங்கி: மலேசியாவின் ஜாலான் ஜோகூர் பாரு - மெர்சிங் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது ‘சூப்பர்கார்’ ஒன்று தீப்பிடித்து எரிந்தது.
அதிலிருந்த சிங்கப்பூரைச் சேர்ந்த கணவனும் மனைவியும் தீயின் பிடியில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் இயோ டியன் வென் லியோங், 34 - இங் புவே யிங், 33, என அடையாளம் காணப்பட்டனர்.
இவ்விபத்து சனிக்கிழமை (மே 9) காலை நேர்ந்தது.
அதன் தொடர்பில் காலை 9 மணியளவில் பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்தது என்று கோத்தா திங்கி காவல்துறைத் தலைவர் யூசோஃப் ஒத்மான் தெரிவித்தார்.
“விபத்தில் சிக்கிய ‘ஃபெராரி’ சொகுசு காரை ஆண் ஓட்டிச் செல்ல, பெண் முன்னிருக்கையில் அமர்ந்திருந்தார். கார் சறுக்கிச் சென்று விபத்துக்குள்ளானதாக நம்பப்படுகிறது. அதனால் கடுமையாகக் காயமுற்ற இருவருக்கும் தீக்காயங்களும் ஏற்பட்டன. அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது,” என்று சனிக்கிழமை திரு ஒத்மான் விவரித்தார்.
இருவரின் உடல்களும் உடற்கூறாய்விற்காகக் கோத்தா திங்கி மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டன.
விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

