ஒருமுறை மட்டும் இடம்பெறும் நடவடிக்கையாக, ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும் 'சிஓஇ' சான்றிதழ்கள் காலாவதி ஆன பிறகு அவற்றை வழக்கமான 'சிஓஇ' சான்றிதழ்களின் எண்ணிக்கையுடன் சேர்க்க நிலப் போக்குவரத்து ஆணையம் திட்டமிடுகிறது என்று போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன்நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.
சிங்கப்பூரில் மே, ஜூன், ஜூலை மாதங்களில், 'ஏ' பிரிவின்கீழ் வரும் 1600 சிசிக்குக் குறைவான ஆற்றல்கொண்ட சிறிய ரக கார்களுக்கு ஒதுக்கப்படும் 'சிஓஇ' எண்ணிக்கை 24 விழுக்காடு அதிகரிக்கும். 'பி' பிரிவின்கீழ் வரும் அதிக ஆற்றல் கொண்ட கார்களுக்கு அது 15 விழுக்காடாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன உரிமைச் சான்றிதழ் ('சிஓஇ') கட்டணங்கள் தொடர்ந்து உயருமென எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் கூறினார். கார்களின் எண்ணிக்கை அறவே அதிகரிக்காமலிருப்பதை உறுதிசெய்யும் கொள்கையைப் பின்பற்றுவதும் குடும்ப வருமானம் உயர்ந்திருப்பதும் அதற்குக் காரணங்கள்.
'சிஓஇ' நடைமுறைமீதான நாடாளுமன்றக் கேள்விகள் தொடர்பில் அமைச்சர் நிலை அறிக்கையை வெளியிட்ட போது (மே 8) அவர் உரையாற்றினார்.
"அடுத்துவரும் ஆண்டுகளில் குடும்ப வருமானம் தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும். அரசாங்கம் கார்களின் எண்ணிக்கையை நிலையாக வைத்திருக்கும் கொள்கையைப் பின்பற்றுகிறது.
"எனவே நீண்டகால அடிப்படையில் 'சிஓஇ' கட்டணங்கள் ஏறுமுகமாகவே இருக்கும்," என்றார் அமைச்சர்.
சிறிய, பெரிய கார்களுக்கான 'சிஓஇ' ஒதுக்கீடுகள் அதிகரிக்கும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டபோதும், சிங்கப்பூரின் போக்குவரத்துக் கொள்கை பெரிய அளவில் பொதுப்போக்குவரத்தையே முக்கியமாகக் கருதுகிறது என்று அவர் வலியுறுத்தினார். குறைவான கார்களைக் கொண்ட வருங்காலத்தை நோக்கி நாடு பயணம் செய்வதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
'சிஓஇ' கட்டணமுறை குறித்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20க்கு மேற்பட்ட கேள்விகளை எழுப்பியிருந்தனர்.
தொடர்புடைய செய்திகள்
'சிஓஇ' கட்டண உயர்வு, தனியார் வாடகை கார் நிறுவனங்களின் தாக்கம் போன்றவை குறித்து அந்தக் கேள்விகள் அமைந்திருந்தன.
அத்தகைய கார்களின் எண்ணிக்கைக்கு உச்ச வரம்பு நிர்ணயிக்க இயலுமா என்றும் ஒன்றுக்கு மேற்பட்ட கார்களை வைத்திருக்கும் குடும்பங்கள் அல்லது வெளிநாட்டினரால் கார்களுக்கான தேவை அதிகரித்துள்ளதா என்றும் கேட்கப்பட்டது.
குழந்தைகள், முதியோரைக் கொண்ட குடும்பங்களுக்கும் வாழ்வாதாரத்துக்கு கார்களை நம்பியிருப்போருக்கும் கார்கள் தேவை என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்கறை தெரிவித்தனர்.
அமைச்சர் ஈஸ்வரன் தமது உரையில், "நடந்து செல்வோர், சைக்கிளோட்டிகள், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோர் ஆகியோருக்கு அரசாங்கம் முன்னுரிமை தரும். தனியார் கார்களின் தேவையைக் குறைப்பதும் அதன் முன்னுரிமைகளில் அடங்கும்," என்று கூறினார்.
சிறிய கார்களுக்கான 'சிஓஇ' கட்டணம் $100,000ஐயும் பெரிய கார்களுக்கான கட்டணம் $120,000ஐயும் தாண்டியுள்ள வேளையில் அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கெனவே ஐந்து ஆண்டுகளுக்கு மறுமதிப்பீடு செய்யப்பட்ட அல்லது நீட்டிக்கப்பட்ட 'சிஓஇ' சான்றிதழ்களை மேலும் நீட்டிக்க இயலாது. அந்த கார்களைப் பதிவு நீக்கம் செய்யவேண்டியது கட்டாயம்.
அதன்மூலம் கிடைக்கும் கூடுதல் 'சிஓஇ' சான்றிதழ்களின் எண்ணிக்கை அடுத்தசில காலாண்டுகளுக்கு மறுவிநியோகம் செய்யப்படும் என்று அமைச்சர் ஈஸ்வரன் கூறினார்.
ஏறத்தாழ 6,000 ஐந்தாண்டு 'சிஓஇ' சான்றிதழ்கள் அவ்வாறு பகிர்ந்தளிக்கப்படும் என்று நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியது.
இம்மாதம் முதல் ஜூலை வரையிலான 'சிஓஇ' ஒதுக்கீடு 9,575ல் இருந்து 10,431க்கு உயர்த்தப்படவிருப்பதாக அது குறிப்பிட்டது.