சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையிலான கடற்பாலத்தில் முன்னால் சென்ற கார்களை முந்திக்கொண்டு செல்ல நினைத்த கார் ஒன்று விபத்துக்குள்ளானது.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட அந்தக் கார் கடற்பாலத்தில் உள்ள பேருந்து தடத்தைப் பயன்படுத்தி இதர கார்களை முந்திக்கொண்டு செல்ல முயன்றபோது பின்புறமாக வந்த பேருந்து ஒன்று அதன்மீது மோதியது. பேருந்தால் மோதப்பட்ட கார் மேலும் இரண்டு சிங்கப்பூர்க் கார்கள்மீது மோதியதில் விபத்து மோசமானது.
ஜூலை 17ஆம் தேதி காலை சுமார் 11.19 மணியளவில் ஜோகூரை நோக்கிச் செல்லும் கடற்பாலத்தில் விபத்து நேர்ந்ததாக ஓரியெண்டல் டெய்லி நாளேடு குறிப்பிட்டது.
கார்களுக்கான தடத்திலிருந்து பேருந்துக்குரிய தடத்தில் சென்ற கார் பிஒய்டி (BYD) என்று அறியப்படுகிறது. அது பேருந்துகளுக்கான தடத்தைப் பயன்படுத்தி முந்திச் சென்றதால் விபத்து நேர்ந்ததாக மலேசியக் காவல்துறை குறிப்பிட்டது. இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்தால் பாதிக்கப்பட்ட ஓட்டுநர்கள் அனைவரும் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இணையத்தில் பரவிவரும் படங்கள் மூலம் விபத்துக்குள்ளான இதர கார்கள், மெர்சிடிஸ் என்றும் டொயோட்டா என்றும் அறியப்படுகிறது.
பின்னாலிருந்து வரும் வாகனங்களைக் கவனிக்காமல் பேருந்து தடத்துக்குள் பிஒய்டி கார் நுழைந்ததே விபத்துக்கான காரணம் என்று இணையவாசிகள் குறைகூறினர்.
கடற்பாலத்தின் ஆக வலதுபுறத் தடத்தில் பயணம் செய்வதைத் தவிர்க்கும்படி சிலர் கூறுகின்றனர். சரியான முறையில் வாகனம் ஓட்டினாலும் விபத்துகள் நேரும்போது அத்தகையோரும் பாதிக்கப்படலாம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.