மது அருந்திவிட்டு கார் ஓட்டி விபத்துக்குள்ளான ஆடவரைக் காவல்துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டிருந்தபோதும் ஆடவர் காரை ஓட்டியதாகக் கூறப்படுகிறது.
நிக்கோல் ஹைவேக்கும் சிம்ஸ் அவென்யூவுக்கும் இடைப்பட்ட சந்திப்பில் ஏற்பட்ட விபத்து குறித்து சனிக்கிழமை (செப்டம்பர் 13) பின்னிரவு 1.45 மணியளவில் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தகவல் கிடைத்தது.
பீச் சாலைக்கு அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்துக் காவல்துறை அதிகாரிகள் காரை நிறுத்தும்படி கூறியபோது ஓட்டுநர் அங்கிருந்து விரைந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது சமிக்ஞை விளக்குக் கம்பத்தில் ஆடவரின் கார் மோதியது.
சிங்கப்பூர் ரோட்ஸ் அக்சிடெண்ட்.காம் (Singapore Roads Accident.com) என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் விபத்தைக் காட்டும் காணொளியில் கறுப்பு கார் ஒன்று பாதசாரிகளின் நடைப்பாதையில் ஏறி, சந்திப்பில் உள்ள சமிக்ஞை விளக்குக் கம்பத்தில் மோதி நின்றிருப்பதைக் காண முடிகிறது.
காரின் முன்பக்கம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. சமிக்ஞை விளக்குக் கம்பமும் சேதமுற்றது.
காரை ஓட்டிய 44 வயது ஆடவர் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுப் பின் கைதுசெய்யப்பட்டார்.
அதிகாரிகளின் விசாரணை தொடர்கிறது.

