தீவு விரைவுச்சாலையில் ஏற்பட்ட கார் விபத்து தொடர்பான விசாரணையில் 39 வயது ஆடவர் உதவி வருவதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆடவர் ஓட்டிய கார் மற்றொரு காருடன் மோதியதில் இரண்டு கார்களிலும் தீப்பற்றிக்கொண்டது.
ஏப்ரல் 28ஆம் தேதி காலை 7.15 மணியளவில் சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் விரைவுச்சாலையில் இரண்டு கார்கள் விபத்துக்குள்ளான தகவல் கிடைத்ததாகக் காவல்துறை அதிகாரிகள் கூறினர்.
விபத்தில் லேசான காயமடைந்த 33 வயது பெண் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்படுவதை மறுத்துவிட்டார் என்று காவல்துறையினர் குறிப்பிட்டனர்.
இணையத்தில் பரவிவரும் காணொளிகளில் இரண்டு கார்கள் விரைவுச்சாலையின் வலது தடத்தில் மோதிய நிலையில் காணப்பட்டன. வெள்ளை நிறக் காரின் பின்புறத்திலும் கறுப்பு நிற காரின் முன்புறத்திலும் தீப்பற்றியெரிந்தது. பிற்பாடு வெளியான படங்கள் கார்கள் கருகிச் சாம்பலானதைக் காட்டுகின்றன.
கறுப்பு நிற காரின் ஓட்டுநர் விசாரணையில் உதவி வருகிறார். கார்கள் தீப்பற்றியதற்கான காரணம் ஆராயப்படுகிறது.