துவாஸ் சோதனைச்சாவடியில் செப்டம்பர் மாதத்திலிருந்து கார்த் தடங்கள் மூடப்படும்

துவாஸ் சோதனைச்சாவடியில் செப்டம்பர் மாதத்திலிருந்து கார்த் தடங்கள் மூடப்படும்

2 mins read
75f7772d-941a-458f-9911-ea4b51daa08f
புதிய தானியங்கி எல்லைச் சோதனைக் கட்டமைப்புக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டின் பிற்பகுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம், புதன்கிழமை (ஆகஸ்ட் 26) ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

துவாஸ் சோதனைச்சாவடி வழியாக மலேசியா செல்லும் கார் ஓட்டுநர்கள், செப்டம்பர் முதல் தேதியிலிருந்து வழித்தடங்கள் சில தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதை எதிர்கொள்ள நேரிடலாம். புதிய தானியங்கி எல்லைச் சோதனைக் கட்டமைப்புக்கான பணிகள் தொடங்கவிருப்பதே அதற்குக் காரணம்.

கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டின் பிற்பகுதி வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகக் குடிநுழைவு, சோதனைச்சாவடிகள் ஆணையம், புதன்கிழமை (ஆகஸ்ட் 26) ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது.

இந்தக் காலத்தில், கார்கள் புறப்பட்டுச் செல்லும் இடங்களில் சில பகுதிகள் கட்டங்கட்டமாகத் தற்காலிகமாக மூடப்படும்.

திட்டமிடப்பட்ட கட்டுமானப் பணிகளில், குடிநுழைவு, சோதனைச்சாவடி அதிகாரிகளால் இயக்கப்படும் தற்போதைய கார் முகப்புகள் அகற்றப்பட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தானியங்கிச் சோதனைக் கட்டமைப்பு வழித்தடங்கள் அமைக்கப்படும்.

அந்தக் கட்டமைப்பின் மூலம், காரில் செல்லும் ஓட்டுநர்களும் பயணிகளும் வாகனங்களை விட்டு வெளியேறாமலேயே, அங்க அடையாளச் சரிபார்ப்புடன்கூடிய கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்திக் குடிநுழைவுச் சோதனையை முடித்துக் கொள்ள முடியும்.

பாதிக்கப்பட்ட வழித்தடங்களையும் பகுதிகளையும் சுற்றிப் பயணிகள் பாதுகாப்பாகச் செல்வதற்கு வழிகாட்டும் வகையில் அறிவிப்புப் பலகைகள், சாலைப் பாதுகாப்பு அடையாளங்கள், தடுப்புகள் முதலியவை அமைக்கப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்தது.

பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னர், நிலவழிச் சோதனைச்சாவடிகளில் போக்குவரத்து நிலவரங்களைச் சரிபார்த்துக்கொள்ளுமாறு பயணிகளுக்கு ஆலோசனை கூறப்படுகிறது. அதேநேரம் வழித்தடங்களில் சீராகச் செல்லுமாறும் போக்குவரத்து விதிமுறைகளைப் பின்பற்றுமாறும் அவர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

நிலவழிச் சோதனைச்சாவடிகளில் விரைவாகச் சோதனையை முடிக்க கியூஆர் குறியீடுகளைப் பயன்படுத்துமாறும் பயணிகள் ஊக்கவிக்கப்படுவதாக ஆணையம் கூறியது.

கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படும் வேளையில், பொதுமக்கள் பொறுமையுடனும் புரிந்துணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் ஆணையம் தெரிவித்தது.

சாங்கி விமான நிலையத்தில் 2024ஆம் ஆண்டு முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆணையத்தின் தானியங்கிச் சோதனைக் கட்டமைப்பு, நிலவழிச் சோதனைச்சாவடிகளில் அனைத்து வாகனங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று மூத்த அமைச்சர் கே. சண்முகம் இவ்வாண்டு மே 8ஆம் தேதி அறிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்
சிங்கப்பூர்மலேசியாவாகனம்போக்குவரத்துகுடிநுழைவுசோதனைச்சாவடி