சிங்கப்பூரில் 2024ஆம் ஆண்டில் கூடுதல் கார் கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
மின்சார வாகனங்களுக்கும் இது பொருந்தும்.
அண்மைய ஆண்டுகளில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை ஏற்றம் கண்டுள்ளது.
கார் கடன் வாங்கியோர் மாதந்தோறும் கடனை அடைப்பதில் சிரமப்படுவதற்கான அறிகுறிகள் இல்லை என்று வங்கிகளும் நிதி நிறுவனங்களும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தன.
வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று அண்மையில் அமெரிக்கா அறிவித்தது.
இருப்பினும், குறுகிய காலகட்டத்தில் கார் கடன் தொகை குறைவதற்கான சாத்தியம் மிகவும் குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் எஞ்சியுள்ள கார் கடன் தொகை $10.2 பில்லியனை எட்டியுள்ளதாகப் புள்ளிவிவரத் துறையின் ஆக அண்மைய தரவுகள் காட்டுகின்றன.
2023ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தைவிட இது 3.8 விழுக்காடு அதிகம்.
தொடர்புடைய செய்திகள்
2024ஆம் ஆண்டில் மேலும் பல கார் கடன்களை விரிவுபடுத்தியிருப்பதாக வங்கிகளும் நிதி நிறுவனங்களும் கூறின.
2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கும் ஆகஸ்ட் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 2024ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தில் யுஓபி வங்கி வழங்கிய சராசரி மாதாந்தர கார் கடன் எண்ணிக்கை 75 விழுக்காட்டுக்கும் அதிகம் உயர்ந்ததாக அந்த வங்கியின் தனிநபர் நிதிச் சேவைப் பிரிவின் தலைவர் ஜேக்லின் டான் தெரிவித்தார்.
மின்சார வாகனங்களுக்காக யுஓபி வங்கி வழங்கும் கார் கடன் ஆண்டு அடிப்படையில் இரு மடங்கு உயர்ந்ததாகவும் அவர் கூறினார்.
கார் கடன்களின் எண்ணிக்கை சீரான முறையில் அதிகரித்து வருவதாக ஓசிபிசி வங்கியின் பயனீட்டாளர் கடன் பிரிவுத் தலைவர் டோக் கியோக் பெங் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதத்துடன் ஒப்பிடுகையில், 2024ஆம் ஆண்டின் முற்பாதியில் மின்சார கார்களுக்காக வழங்கப்பட்ட கார் கடன் எண்ணிக்கை 30 விழுக்காடு அதிகம் என்று அவர் கூறினார்.

