அங் மோ கியோவில் வெள்ளிக்கிழமை (நவம்பர் 20) இரண்டு கார்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் கார் ஒன்று தலைகீழாகக் கவிழ்ந்ததைத் தொடர்ந்து, பெண் ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
அங் மோ கியோ அவென்யூ 5ல் நேர்ந்த அவ்விபத்து குறித்துக் காலை 9.15 மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் காவல்துறையினரும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினரும் தெரிவித்தனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்குப் பதிலளித்த காவல்துறையினர், புவாங்கோக் கிரீனை நோக்கிச் செல்லும் திசையில் நிகழ்ந்த அவ்விபத்தில், 55 வயதுப் பெண்ணும் 65 வயது ஆணும் ஓட்டிச்சென்ற கார்கள் சம்பந்தப்பட்டிருந்ததாகக் கூறினர்.
அந்தப் பெண் சுயநினைவுடன் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டதாகவும் ஆண் ஓட்டுநர் விசாரணையில் உதவி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
விபத்தின் தொடர்பில், காவல்துறை விசாரணை தொடர்கிறது.
“மத்திய விரைவுச்சாலைக்கு முன்னதாக, அங் மோ கியோ அவென்யூ 5ல் (மத்திய விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் திசையில்) விபத்து ஏற்பட்டுள்ளது,” என்று நிலப் போக்குவரத்து ஆணையம் காலை மணி 9.42க்கு ‘எக்ஸ்’ சமூக ஊடகத் தளத்தில் தகவல் வெளியிட்டது. அதோடு, ஆக இடப்புறத்தில் உள்ள இரண்டு தடங்களைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டுநர்களுக்கு அது அறிவுறுத்தியது.
ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியிடப்பட்ட அரையாண்டுச் சாலைப் போக்குவரத்துப் புள்ளிவிவரங்களில், 2026ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஏற்பட்ட சாலை விபத்துகள், உயிரிழப்புகள் அல்லது காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிகரித்துவருவதாகப் போக்குவரத்துக் காவல்துறை தெரிவித்திருந்தது.
