‘சன்டெக்’கில் பூட்டப்படாத கார்களில் களவுபோன பல்லாயிரம் பணம், ரோலக்ஸ் கடிகாரம்

‘சன்டெக்’கில் பூட்டப்படாத கார்களில் களவுபோன பல்லாயிரம் பணம், ரோலக்ஸ் கடிகாரம்

1 mins read
ec186c78-f3a5-4862-bf76-fddcc151dd4d
சன்டெக் சிட்டி கார் நிறுத்துமிடத்தில் கதவுகள் பூட்டப்படாத கார்களைக் குறி வைத்து ஆடவர் தொடர்ந்து திருடி வந்தார். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சன்டெக் சிட்டி கார் நிறுத்துமிடத்தில் பூட்டப்படாத கார்களுக்குள் விலை உயர்ந்த பொருள்களையும் ரொக்கப் பணத்தையும் 56 வயது ஆடவர் ஒருவர் திருடினார்.

கடந்த மே 13ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிவாக்கில் சிங்கப்பூரர் ஒருவர் சன்டெக் சிட்டி கீழ்த்தள கார்நிறுத்துமிடத்தில் தனது காரை நிறுத்திவிட்டுச் சென்றார். அந்த காரின் கதவுகளை அவர் பூட்டவில்லை.

கதவுகள் பூட்டப்படாத கார்களுக்குள் திருடும் நோக்குடன் அங்கு வந்த முஹம்மது ரஷித் முஹம்மது அலி என்பவர், அந்த கார் பூட்டப்படாததை அறிந்து கதவுகளைத் திறந்து அதனுள் சென்றார்.

1,000 வெள்ளி ரொக்கத்தையும் 30,000 வெள்ளி மதிப்புள்ள கைக்கடிகாரத்தையும் அந்த காரிலிருந்து அவர் திருடினார். மூன்று நாள்கள் கழித்து அதுகுறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 29ஆம் தேதியும் அதே பகுதியில் பூட்டப்படாத கார் ஒன்றினுள் இருந்த 14,000 வெள்ளி மதிப்புள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரத்தை ரஷித் திருடினார்.

அதே நாள் இரவு 9.50 மணியளவில் மற்றொரு காரில் இருந்து 25,328 ரொக்கத்தை அவர் திருடினார். அந்த காரின் கதவுகளும் பூட்டப்படவில்லை.

திருடிய பணத்தில் நகைக்கடை ஒன்றில் $10,350 மதிப்புள்ள கைப்பட்டையை அவர் வாங்கினார்.

புகார்கள் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து செப்டம்பர் 19ஆம் தேதி ரஷித்தை காவல்துறை கைது செய்தது.

நீதிமன்ற விசாரணைக்குப் பின்னர், புதன்கிழமை (நவம்பர் 27) அவருக்கு 26 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்